tamilnadu

img

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் பெடரர், பார்டி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் தற்போது காலிறுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. 

ஆடவர் ஒற்றையர் 


ஆடவர் ஒற்றையர் செவ்வாயன்று நடைபெற்ற முதலாவது காலிறுதி ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீரரான சுவிஸின் ரோஜர் பெடரர் தரவரிசையில் இல்லாத அமெரிக்காவின் சான்ட்கிரனை 6-3, 2-6, 2-6, 7-6 (10-8), 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி முதல் நபராக அரையிறுதிக்கு முன்னேறினார். இரு வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 3:31 மணிநேரம் நடைபெற்ற  இந்த ஆட்டம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

மகளிர் ஒற்றையர் 

மகளிர் ஒற்றையர் முதலாவது காலிறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் பார்டி, அதிரடிக்கு பெயர் பெற்ற செக் குடியரசின் கிவிட்டோவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பார்டி 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கெனின், நடப்பு சீசனில் அபாயகரமான வீராங்கனையாக வலம் வந்த துனிசியாவின் ஜாபேரை எதிர்கொண்டார். டென்னிஸ் உலகமே அதிகம் எதிர்பார்த்த இந்த ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கெனின்  ஜாபேரை புரட்டியெடுத்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

பயஸ் ஜோடி தோல்வி

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் லத்வியா வீராங்கனை ஒஸ்டாபென்கோவுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். முதல் சுற்றில் வெற்றி பெற்ற பயஸ் ஜோடி 2-வது சுற்றில் முர்ரே (இங்கிலாந்து) - மாட்டக் சாண்ட்ஸ் (அமெ.,) ஜோடியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய முர்ரே - சாண்ட்ஸ் ஜோடி 6-2, 7-5 என்ற செட் கணக்கில் பயஸ் ஜோடியை வீழ்த்தியது. எனினும் இதே கலப்பு இரட்டையர் பிரிவில் மற்றொரு இந்திய வீரர் போபண்ணா உக்ரைன் வீராங்கனை நாடியவுடன் ஜோடி சேர்ந்து ஏற்கெனவே  காலிறுதி சுற்றுக்கு முன்னேறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;