tamilnadu

img

டெல்டாவுக்கான நீர்திறப்பு குறைப்பு

சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டு வரும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியாக புதன்கிழமை காலை குறைக்கப்பட்டது. அணைக்கான நீர்வரத்து, விநாடிக்கு 6,583 கன அடியாக அதிகரித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12 ஆம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு இருந்தது. பின்னர் நீர் திறப்பின் அளவு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு வெறும் 174 கன அடி மட்டுமே இருந்ததால், ஜூலை 14-ம் தேதி அன்று நீர் திறப்பு விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
மறுநாள் 15 ஆம் தேதியன்று நீர்திறப்பு 12 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து, 16 ஆம் தேதியன்றும் நீர் திறப்பு மேலும் குறைக்கப்பட்டு, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக நிலை நிறுத்தப் பட்டது. அன்று தொடங்கி புதனன்று  (ஜூலை 29) காலை வரை நீர் திறப்பு விநாடிக்கு10 ஆயிரம் கன அடியாக நீடித்து வந்தது.இந்த நிலையில், நீர்வரத்தை விட, நீர் வெளியேற்றும் அளவு மிகவும் அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கடந்த 15 நாட்களில் அணையின் நீர்மட்டம் 10 அடி குறைந்துள்ளது.

அணையின் நீர்மட்டம் புதனன்று காலை 64.69 அடியாக இருந்த நிலையில் டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி என்ற அளவில் இருந்து, காலை 9.30 மணி அளவில், விநாடிக்கு 7,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.இதனிடையே கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப் படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து செவ்வாயன்று காலை விநாடிக்கு 6,065 கன அடி என்ற அளவில் இருந்து புதன் கிழமை காலை விநாடிக்கு 6,583 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 28.30 டிஎம்சி ஆக இருக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்வதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இனி தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

;