tamilnadu

img

குடிநீரில் கழிவு நீர் கலப்பு பொதுமக்கள் சாலை மறியல்

  சேலம், ஆக.8 -    குடிநீரில்  கழிவு நீர் கலப்பதை தடுக்கக் கோரி பொதுமக்கள் வியாழனன்று திடீர்  சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  சேலம் மாவட்டம், வீரகனூர்  பேரூ ராட்சிக்கு உட்பட்ட 1 ஆவது வார்டு அம் பேத்கர் நகர் பகுதிக்கு மேட்டூர்-ஆத்தூர் கூட்டு குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணறுகள்  மூலமாக பேரூராட்சி நிர்வாகம் குடிநீர்  விநியோகம் செய்யப்படுகிறது. இந் நிலையில் கடந்த சில மாதங்களாகவே  குடிநீர் குழாயில்  கழிவுநீர் மற்றும் மலம்  கலந்த குடிநீர் வருவதாகவும், இதை  அருந்தும் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட உடல் நல கோளாறுகள் ஏற்படுவதாக தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை பேரூ ராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்தனர். மேலும்  பொதுமக்கள் போராட்டங்களும் நடத் தினர். ஆனால் அதிகாரிகள் எவ்வித  நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.   இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள் பெரம்பலூர் - ஆத்தூர் சாலையில்  திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் காவல்துறையினருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் சம்பவ இடத்திற்கு செயல் அலுவலர் சண்முகசுந்தரி இரண்டு  மணி நேரம் தாமதமாக வந்தார். பொது மக்களுடன்  சமரசம் செய்ய முயற்சியில் ஈடு பட்டார். ஆனால்  பெண்கள் செயல் அலு வலரை சிறைபிடித்து கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர், பொதுமக்களிடமிருந்து செயல் அலுவலரை மீட்டனர். இந் நிலையில் காவல்துறை வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் பொதுமக்கள் ஈடு பட்டனர்.   மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின்பு செயல் அலுவலரை கழிவு நீர் கலக்கும்  குழாய் உள்ள பகுதிக்கு அழைத்து சென்று  காண்பித்தனர். இதையடுத்து குடிநீர் குழாயை சரி செய்து முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதி காரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.  இந்த மறியல் போராட் டத்தால் ஆத்தூர்-பெரம்பலூர் செல்லும் சாலையில் மூன்று மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

;