tamilnadu

img

இளம்பிள்ளையில் குட்கா விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல்  

இளம்பிள்ளையில் குட்கா விற்பனை செய்த 4 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.  

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை மற்றும் இடங்கணசாலை அதன் சுற்றுப்புறத்தில் விசைத்தறி மூலம் சேலை உற்பத்தி மற்றும் அதன் சார்பு தொழிலுக்காக புலம் பெயர்ந்த (வடமாநிலத்தவர்) தொழிலாளர்கள் அதிக அளவில் தொழில் புரிந்து வருகின்றனர். இவர்கள் அதிகமாக போதை பொருட்களை உபயோகித்து வருகின்றனர். மேலும் மளிகைக்கடை, பெட்டிக்கடை வியாபாரிகள் குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அதிக அளவில் போதை பொருளை உபயோகப்படுத்தி வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர்.

இதனையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் உத்தரவின் பெயரில் சங்ககிரி டி.எஸ்.பி. நல்லசிவம் மேற்பார்வையில் மகுடஞ்சாவடி ஆய்வாளர் இளங்கோ தலைமையில் உதவி ஆய்வாளர் ரகு மற்றும் பெரியசாமி ஆகியோர் நேற்றிரவு பெருமாகவுண்டம்பட்டி, இளம்பிள்ளை, இடங்கணசாலை பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.  அப்போது பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் ஜகுபர்அலி (வயது 50), இளம்பிள்ளை சவுண்டம்மன் கோவில் பகுதியில் யாசர்அராவத் (28), இளம்பிள்ளை, புதுரோடு பகுதியில் குமார் (35), இடங்கணசாலை மோட்டூர் பகுதியில் சீனிவாசன் (42) ஆகியோர் மளிகை கடை மற்றும் பெட்டிக்கடைகளில் இருந்த சுமார் ரூ.15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து 4 பேரையும் கைது செய்து 4 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும் அவர்களுக்கு எங்கிருந்து போதைப் பொருட்கள் சப்ளை செய்யப்படுகிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;