tamilnadu

img

சேலத்தில் காவல்துறை என்கவுண்டர் - சிபிஎம் உண்மை அறியும் குழு விசாரணை

சேலம், மே 6-சேலத்தில் காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்ட கதிர்வேல் இல்லத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் உண்மையை கண்டறியும் குழுவினர் நேரில் விசாரணை நடத்தினர்.சேலம் மாவட்டம், காரிப்பட்டி காவல் துறையினர் கடந்த சிலதினங்களுக்கு முன்பு மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவரை கொலை குற்றவிசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இதன்பின்னர், அங்குள்ள ஆலமரம் அருகில் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது, காவல்துறையினரை ஆயுதங்களை கொண்டு தாக்கிவிட்டு கதிர்வேல் தப்பிக்க முயற்சி மேற்கொண்டதால் காவல்துறையினர் அவர் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர்.இந்நிலையில், இச்சம்பவம் குறித்து உண்மை நிலையை அறியமார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இக்குழு மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமையில் திங்களன்று கதிர்வேல் இல்லத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் காவல்துறை கூறும் விஷயங்களும், கதிர்வேல் என்கவுண்டர் செய்யப்பட்டப் பின்தெரிவித்த கருத்துகளும் முரணாகஉள்ளது என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, துப்பாக்கிச்சூடு நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு கதிர்வேல் வீட்டிற்கு இரவு நேரத்தில் ஐந்து காவலர்கள் வந்து கதிர்வேலின் புகைப்படத்தை வாங்கிச் சென்றதாகவும், அதைத்தொடர்ந்து வீராணம் காவல்நிலையத்தில் கதிர்வேல் தானாகவே முன்வந்து சரணடைந்த நிலையில் அவர் காரிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.மேலும், கதிர்வேல் கைது செய்யப்பட்டவுடன் அவர்களின் பெற்றோருக்கு எவ்வித தகவலும் தரவில்லை. மாறாக, துப்பாக்கி சூட்டில் இறந்த கதிர்வேலின் உடலை சேலம்அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற பின்புதான் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், துப்பாக்கி சூடு நடந்ததாக சொல்லப்படும் ஆலமரம் பகுதி தொடர்ச்சியாக மக்கள் சென்று வரும் போக்குவரத்து நிறைந்த சாலையையொட்டி உள்ள பகுதியாகும். அருகில் குடியிருப்புகள், செங்கல் சூளைகள் உள்ளது. இவ்வாறு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் ஒருவர் கூட துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக கூறவில்லை எனவும், துப்பாக்கி சூடு நடந்ததாக சொல்லப்படும் இடத்திற்கு மிக அருகாமையிலேயே இறந்து போன கதிர்வேல் வீடுஇருந்த போதிலும் அவரின் குடும்பத்திற்கு காவல் துறையினர் தகவல் தெரிவிக்கவில்லை என்பது உண்மை அறியும் குழுவின் விசாரணையில் தெரியவந்தது.மாறாக, காரிப்பட்டி காவல் நிலையத்தின் மேல் மாடியில் தான் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காவல் நிலையத்திற்கு வெளியே வழக்கத்திற்கு அதிகமானகாவல்துறையினர் நின்றிருந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஆகவே, கதிர்வேல் தப்பியோடியது, காவலர்களை தாக்கியது, பதுங்கியிருந்தது என சொல்லுவதெல்லாம் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. மேலும் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனையின்போது பெற்றோரை மட்டும் பிரேதத்தை பார்க்க காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். மற்றஉறவினர்களை அனுமதிக்கவில்லை. இச்சூழலில் பிரேத பரிசோதனை முடிந்து உடலை வீட்டிற்கு கொண்டுசென்று பார்த்தபோது கழுத்து உள்ளிட்ட இடங்களில் பல காயங்கள் இருந்துள்ளதாக அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே,காரிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து கதிர்வேலை கடுமையாக தாக்கி துப்பாக்கி சூடு நடத்தி கொன்றுவிட்ட பின், இந்த கொலையை மறைப்பதற்காக காவலர்களை தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டுக் கொன்றதாக சொல்வது நம்பகத்தன்மையோடு இல்லை என அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். ஒருவர் என்ன குற்றம் செய்திருந்தாலும் அவரை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டுமே தவிர, இப்படி காவல்துறையினர் சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியது சரியல்ல. ஆகவே, இந்த சம்பவத்தின் மீது உரிய விசாரணை செய்து உண்மையை அனைவருக்கும் தெரியப்படுத்துவது அவசியமாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மை அறியும்குழுவினர் தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிடவும் முடிவு செய்துள்ளனர்.

;