tamilnadu

img

அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை: தனியார் பள்ளி கராத்தே மாஸ்டர் கைது  

சேலம் மாவட்டத்தில் மூன்றரை ஆண்டுகளாக தொடர் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.  

சேலம் – கருமந்துறை தனியார் பள்ளியில் மூன்றரை ஆண்டுகளாக கராத்தே மாஸ்டரால் தொடர் பாலியல் தொல்லையால் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளியில் படித்து வரும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு சீலியம்பட்டியை சேர்ந்த கராத்தே மாஸ்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. ஊரடங்கு பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும் சிலம்பம் பயிற்சியாளர் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தாக புகார் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

 இதனை அறிந்த பெற்றோர், மாணவியை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து மாணவியிடம் விசாரித்தபோது, கராத்தே மாஸ்டர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினார். அதனை தொடர்ந்து கராத்தே மாஸ்டர் ராஜாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் ராஜா மீது புகார் தெரிவித்தபோது நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளியின் தாளாளர் ஸ்டீபன்  தேவராஜையும் போலீசார் கைது செய்தனர்.  

இதுகுறித்து சிபிஎம் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி வெளியிட்ட அறிக்கையில், இவரது பாலியல் தொந்தரவு குறித்து மாணவி புகார் தெரிவித்த உடன் நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்று நடந்திருப்பதை தடுத்திருக்கலாம். இவர்களால் இன்னும் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்களா என மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீடு செய்து விசாரணை செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பள்ளியில் படித்து வரும் மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தொடர் படிப்புக்கு அரசு மாற்று ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறது.

;