tamilnadu

img

சேலம் வனப்பகுதியில் புள்ளிமான்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சேலம், ஏப்.27-சேலம் மாவட்ட வனப்பகுதியில் புள்ளிமான்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மாவட்ட வனத் துறையும் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.சேலம் மாவட்ட வனத்துறை மற்றும் சேலம் இயற்கை மற்றும் வன விலங்கு பாதுகாப்பு அமைப்பு இணைந்து சேலம் மாவட்டத்திலுள்ள அடர்ந்த காடுகளில் வசிக்கும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியை வெள்ளியன்று துவங்கியது. மாவட்ட வன அதிகாரி பெரியசாமி தலைமையில் 8 குழுக்கள் அமைக்கப்பட்டு 50 தன்னார்வத் தொண்டர்கள் மூலம் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. மேட்டூர், சேர்வராயன் மலைத்தொடர், ஏற்காடு அடிவாரம் மற்றும் ஆத்தூர் வனப்பகுதி கருமந்துறை உள்ளிட்ட வனப்பகுதிகளில் இந்த ஆய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் வன அதிகாரிகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் வன ஆர்வலர்கள் கலந்துகொண்டு வனப்பகுதியில் வாழும் வன விலங்குகள் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர்.மேலும், அடர்ந்த காடுகளில் வனவிலங்குகளின் தடம், அதனுடைய எச்சம், தண்ணீர் அருந்தும் இடம் மற்றும் வனவிலங்குகள் கால் பதிவுகளைக் கொண்டு எந்த மாதிரியான விலங்குகள் என ஜிபிஎஸ் கருவி மூலம் பதிவு செய்யும் அலுவலர்கள் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கால் பதிவு கொண்ட விலங்குகள் எங்கு செல்கின்றன, எங்கு இடம் மாறுகின்றன என்பது குறித்து எதிர்காலத்தில் கணக்கிடவும் இந்த ஜிபிஎஸ் கருவி பயன்படுத்தப்படுகிறது.இதன் அடிப்படையில் சேலம் சேர்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள உயிரியல் பூங்கா, கருங்காலி, தேக்கம்பட்டி, டேனிஷ்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி சனியன்று நடைபெற்றது. 10 பேர் கொண்ட குழுவினர் வனத்துறை அதிகாரிகளின் உதவியோடு அடர்ந்த காடுகளுக்கு சென்று வனவிலங்குகளின் கால் பதிவுகளை ஜிபிஎஸ் கருவிகள் மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமை(இன்று) முடிவடைகிறது. தொடர்ந்து இதனுடைய ஒட்டுமொத்த கால்நடைகளின் எண்ணிக்கை, புதிய விலங்குகளின் வருகை மற்றும் அதனுடைய வழித்தடம் போன்றவை குறித்து அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட வனத்துறைக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் அனுப்பப்பட உள்ளது. தொடர்ந்து கால்நடைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப அதை பாதுகாக்கும் வசதி மற்றும் அதற்கான உணவு முறைகள் குறித்து கால்நடை துறையினர் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த பணி நடைபெறுவதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கோகுல் என்பவர் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பில் அயல்நாட்டு பறவைகள் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்து அதன் சீதோஷ்ண நிலைகளை அனுபவித்துவிட்டு மீண்டும் அயல்நாடு செல்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை, அதன் வழித்தடம் குறித்து கணக்கிடப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் சேலம் மாவட்டத்தில் புள்ளிமான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல், காட்டு எருமைகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து உள்ளது. மேலும், மேட்டூர் வனத்துறை பகுதிகளில் யானைகள் வந்து சென்றதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கணக்கெடுப்பு பணியில் வனவிலங்குகளின் பதிவுகள் ஜிபிஎஸ் கருவி மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இனி எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட வனவிலங்குகளின் கால் பதிவு கொண்டு, வனவிலங்குகள் எங்கு செல்கின்றன, அதன் வாழ்வாதாரம் குறித்து ஆராயப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;