உளுந்தூர்பேட்டை, மே 19-விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஒன்றியத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறதென்றும், இது தொடர்பாகஉண்மைகளை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காவல்துறையிடம் வலியுறுத்தியுள்ளது.உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புதுநன்னாரம்கிராமத்தைச் சேர்ந்தவர் சாமிதுரை, ஜானகி. இவர்களின் மகன் ராஜதுரை (25). இவர்கள் புதுச்சேரி அருகேயுள்ள திருக்கனூர் ஆண்டிப்பாளையத்தில் செங்கல்சூளையில் பணிபுரிந்துள்ளனர்.இந்நிலையில் சாமிதுரைக்கு சொந்தமான டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டுவதற்கு, மேட்டுநன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் ஓட்டுநகராக சேர்ந்துள்ளார். பரமசிவத்தின் நண்பரான காட்டு பையூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் அடிக்கடி ஆண்டிப்பாளையத்திற்கு வந்து சென்றுள்ளார். விஜயகுமாரும், பரமசிவமும் இரு சக்கர வாகனங்களை திருடி விற்கும் சட்டவிரோத வேலையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தெரியாத ராஜதுரை இவர்களுடன் அப்பாவித்தனமாக பழகி வந்துள்ளார். கடந்த 5ஆம் தேதி 3 பேரும் இருசக்கர வாகனத்தில் புது நன்னாரத்திற்கு வரும்போது திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் இவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, ஆவணங்கள் இல்லாததால் இருசக்கர வாகனத்தை திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.இந்நிலையில் விஜயகுமார், பரமசிவம் ஆகியோரின் திருட்டுத் தொழிலைஅறிந்த ராஜதுரை இவர்களிடம் சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த 6ஆம் தேதி ராஜதுரையை மது குடிக்க விஜயகுமார், பரமசிவம் இருவரும் அழைத்துச் சென்று, அவரை தாக்கி கொலை செய்து, அருகில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தொங்க விட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், 7ஆம் தேதி திருநாவலூர் காவல்நிலையத்தில், சாமிதுரை, மகனைத் தேடி பார்த்ததில் தூக்கில் தொங்கிய நிலையில் ராஜதுரையின் உடல் இருந்ததை கண்டதாகவும், அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.ராஜதுரையின் உடலிலும், கால்களிலும் காயங்கள் இருந்துள்ளது. அவர் கழுத்தில் மாட்டி இருந்த சேலையும் பரமசிவத்தின் மனைவியுடைய சேலைஎன்பதும் தெரியவந்துள்ளது. தூக்கில் தொங்கிய நிலையில் கால்கல் தரையை தொட்டபடி இருந்துள்ளது. எனவே ராஜதுரையின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து, உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநாவலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் காவல்துறையிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் வலியுறுத்தியுள்ளார்.