tamilnadu

img

விவசாயிகளை வஞ்சிக்கும் மோடி அரசைக் கண்டித்து தொழிலாளி பெருமாள் தற்கொலை...

சென்னை:
தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சென்னை, அசோக் நகர் நல்லாங்குப்பம் பகுதியில் வசிக்கும் வர்ணம் பூசூம் வேலை செய்து வந்த பெருமாள் (வயது 68) என்பவர் ஜனவரி 9 அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய மறைவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரி வித்துள்ளது. 

இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

புதுதில்லியில் 45 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் விவசாயிகள் போராட்டம் குறித்தும், மத்திய பாஜக அரசின் பிடிவாதமானப் போக்கு குறித்தும் நண்பர்களிடம் தனது கோபத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திகளை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்ந்து பகிர்ந்தும் வந்துள்ளார். இந்த நிலையில் எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையிலும் விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான பெருமாள், விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்று கடிதம் எழுதி வைத்து விட்டு ஜனவரி 9 ஆம் தேதி பிற்பகல் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெருமாள் அவர்களின் துயர முடிவுக்கு காரணம் மத்திய அரசின் பிடிவாதப் போக்குத்தான்.

வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர். இத்தகைய போராட்டங்களில் பங்கேற்பதன் மூலமும், விவசாயிகளுக்கு விரோதமான மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கை கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வதன் மூலம் தங்களது ஆதரவை பொதுமக்கள் வெளிப்படுத்தலாம். மாறாக, தற்கொலை போன்ற துயரமான முடிவுகள் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.குடும்பத் தலைவரான பெருமாளை இழந்து தவிக்கும் அவருடைய துணைவியார் மற்றும் மகன் லோகேஷ் குமார் ஆகியோர் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளனர். எனவே, தமிழக அரசுஅந்தக் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், பட்டதாரியான அவருடைய மகனுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிடவும் முன்வர வேண்டும். ஜனவரி 13 போகிப் பண்டிகை அன்று “வீட்டிற்கு வேண்டாத பொருட்களை கொளுத்துவதைப் போல, நாட்டிற்கு வேண்டாத விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை தீயிட்டு கொளுத்துவோம்” என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்துள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான குடும்பங்கள் வேளாண் விரோத சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். தமிழ்நாட்டிலும் ஒவ்வொரு குடும்பமும் போகிப் பண்டிகை அன்று சட்ட நகலை எரித்து விவசாயிகள் போராட்டத்திற்கு தங்களது பேராதரவை தர  வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

_____________________

படத்திற்கு கீழே உள்ள குறிப்பு...  

சென்னை அசோக் நகரில் தற்கொலை செய்து கொண்ட பெயிண்டர் பெருமாள் உடலுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் தி.நகர் பகுதிச் செயலாளர் இ.மூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

;