tamilnadu

img

திருவொற்றியூரில் பொதுகழிப்பிடத்திற்காக பெண்கள் போராடும் அவலநிலை

திருவொற்றியூர், ஜூன் 12- சென்னை பெருமாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 3வது வட்டத்தில் உள்ளது  வானொலி  நகர் குடிசைப் பகுதி.   சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்ட காலமாக இங்கு வசித்து வருகின்றன. அனைவரும் கட்டுமான தொழில் செய்யும் அன்றாடங்காய்ச்சிகள். பெண்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க ரயில்வே தண்டவாளத்தையே நம்பி உள்ளனர். திறந்த வெளியில் மலம் கழிப்பது அவமானம் அசிங்கம் என விளம்பரம் செய்யும் மோடியரசு சுவச் பாரத் கிளின் பாரத் என பெருமை பேசும் நிலையில் சென்னையின் அவலம் இது.   தண்டவாளத்தில் இருக்கும்போது சில சமூக விரோதிகள் அப்பெண்கள்மீது கல்லெறிவதும், செல்போனில் போட்டோ எடுப்பதும் போன்ற மோசமான நிகழ்வுகள் பெண்களை பெறும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இதனால்            அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை அவர்கள் அனுகினர். மாதர்சங்கம் மண்டல அலுவலரை சந்தித்து மனு கொடுத்தது. உடனே பொதுக்கழிப்பிடம் கட்டித்தர  நடவடிக்கை எடுக்குமாறு செயற்பொறியாளரை அழைத்து அந்த அதிகாரி உத்தரவும் பிறபித்தார்.   இதன் தொடர்ச்சியாக செயற்பொறியாளர் உதவிப் பொறியாளரை அழைத்து உடனே மதிப்பீடு தயார் செய்ய சொன்னார். உதவி பொறியாளர் மதிப்பீடு தாயார் செய்து ஓராண்டு காலம் ஓடிவிட்டது. ஆனால்  பணிகள்  துவங்கப்படவில்லை. மாதர்சங்க கிளை நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் பலமுறை அதிகாரிகளை சந்தித்தும் முறையிட்டும் பணிகளை தொடங்கவில்லை.  இந்நிலையில் செவ்வாயன்று  ( ஜூன் 11)  மாதர் சங்கத்தினர் காத்திருக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.  அதன் படி மண்டல அலுவலகத்தில் பெண்கள் கூடினர். தகவல் அறிந்து  மண்டல அலுவலர்,  செயற்பொறியாளர், உதவி பொறியாளர் காவல்துறையினர் அனைவரும் அங்கு வந்தனர். மாதர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு  நடத்தினர்.  நிர்பயா திட்டத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் நிதி ஒதுக்குவதில் தாமதமாகி விட்டது என்று  மண்டல அலுவலர் தெரிவித்தார். இதை மாதர்சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்தனர். அந்த நிதியை எதிர்பார்க்காமல் உடனே 15 நாட்களில் பணியை துவக்குவதாக வாக்குறுதி அளித்தார்.  அதேபோல் விம்கோ மார்க்கெட்டில் தெருவிளக்குகள் எரிவதில்லை, மார்கெட்டில் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்களுக்கும் பொதுக்கழிப்பறை தேவையென கோரிக்கை வைத்தனர்.  இரண்டு நாளில்  தெருவிளக்குகளை சரிசெய்யவும்,  கழிப்பறைக்கு இடம் பார்த்து ஆவண செய்யவும் அதிகாரி  ஒப்புக் கொண்டார். இதனால்  காத்திருப்பு போராட்டம் முடிவிற்கு வந்தது.    போராட்டத்திற்கு மாதர்சங்க திருவொற்றியூர் செயலாளர் ஆறுமுகலஷ்மி தலைமைதாங்கினார். மாவட்டச் செயலாளர் பாக்கியலஷ்மி, கிளைத் தலைவர் இந்திரா, செயலாளர் சுகுணா, பகுதி தலைவர்கள் செல்வகுமாரி, புஷ்பா, அலமேலு, கலா உள்ளிட்ட திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

;