tamilnadu

img

ஜல்லிக்கட்டுக்காக  போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை வாபஸ் பெறுக... வாலிபர் சங்கம் வலியுறுத்தல்...

சென்னை:
ஜல்லிக்கட்டுக்காக  போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

2017 ஆம் ஆண்டு, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி மதுரை அலங்காநல்லூரில் துவங்கிய போராட்டம் தமிழகம் முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிட தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து மேற்கண்ட போராட்டம் நடைபெற்றது. 

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் கொடூரமான வன்முறையை கட்டவிழ்த்து விட்டு போராடியவர்கள் மீது தடியடி நடத்தி போராட்டத்தை அரசு கலைத்தது. எல்லாம் முடிந்தபிறகு சட்டமன்றத்தைக் கூட்டி தமிழக அரசு  ஜல்லிக்கட்டு நடத்திட சிறப்பு சட்டத்தை இயற்றியது. மேலும் அன்றைக்கு சட்டமன்றத்தில் பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவோம் என்று அறிவித்தார். ஆனால், போராடிய பல்லாயிரக்கணக்கானோர் மீது தமிழக அரசு பொய் வழக்குப் போட்டு இன்று வரை அலைக்கழிப்பு செய்து வருகிறது.

வருகிற பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைப்பதற்காக தமிழக முதல்வர்   அலங்காநல்லூர் வர இருக்கிறார். மறுபுறம் ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது வழக்குப்போட்டு சிறையில் அடைக்க முயற்சிக்கிறது. தமிழக அரசின் இத்தகைய இரட்டை வேடத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழர்களுக்கும் தமிழ் பண்பாட்டிற்கும் துரோகமிழைக்கும் தமிழக அரசை தமிழக மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தமிழர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டும் வகையில் ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் போராடியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

;