tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : தியாகி சந்துரு

தோழர் பி.ஜே.சந்துரு விருதுநகர்  பாண்டியன் நகரின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கிளை செயலாளராக செயல்பட்டு வந்தவர்.1985ல் கடும் வறட்சி காலத்தில்விருதுநகரில் நடைபெற்ற இந்தியஜனநாயக வாலிபர் சங்க மாநிலமாநாடு வெகுஜன சங்க வசூல் இயக்கத்திற்கு வழிகாட்டியது. இப்பணியில் சக தோழர்களுடன் சந்துரு சிறப்பாகப் பணியாற்றி னார்.குடிநீர்ப் பிரச்சனை மேலோங்கிய காலத்தில் சிலரின் பிடியிலிருந்த  பொதுக்கிணற்றை மீட்டு, மக்களைத் திரட்டி தூர்வாரிப்பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தனர் தோழர் சந்துரு உள்ளிட்ட வாலிபர் சங்கத் தோழர்கள்.லாரி மூலம் குடிநீர் கேட்டு தகவல் பலகையில் எழுதிப் போட்டதை அழித்து விட்டார் ஊராட்சித் தலைவர். இதை எதிர்த்து ஊராட்சி அலுவலகத்தில் போராடினர் சந்துரு உள்ளிட்ட வாலிபர்சங்கத் தோழர்கள்.  பின்பு நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவிற்கு அதே ஊராட்சித் தலைவரைப் பரிசளிக்க அழைத்தவுடன் தான் செய்த  தவறை மக்கள் மத்தியில் ஒப்புக் கொண்டு சந்துரு போன்ற தோழர்களைப் பாராட்டினார் ஊராட்சித் தலைவர்.தோழர் சந்துரு தனது வீட்டில் காந்தி, காமராஜர் படங்களோடு தோழர் லெனின் படத்தையும் மாட்டினார். ரயில்வே அதிகாரியான அவரது தந்தை லெனின் படத்தை அகற்றிவிட்டார். லெனின் படத்தைமீண்டும் மாட்டினால்தான் சாப்பிடுவேன்; வீட்டிற்குள் வருவேன் என வீட்டிலேயே போராட்டத்தைத் துவக்கிவிட்டார் சந்துரு. பின்னர் மாமேதை லெனின் படத்தை வீட்டில் மாட்டிய பிறகே உணவருந்தி னார். வீட்டில் மட்டுமின்றி களத்திலும் சமரசமின்றிப் போராடியவர்.

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் சமூக விரோத கும்பல் தொடர்ந்து மக்களை இடையூறு செய்து வந்தது. அதை எதிர்த்து வாலிபர் சங்கத்தினர் தட்டிக்கேட்டபோது சிறுசிறு மோதல்கள் ஏற்பட்டன. புகார் அளித்தும் காவல்துறை போதிய நடவடிக்கைகள் எடுக்காததால் சமூக விரோதக் கும்பல் மேலும் உற்சாகமடைந்தது. இந்த நேரத்தில் வாலிபர் சங்கத்தின் விருதுநகர் தாலுக்கா மாநாட்டையொட்டிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அப்பணியில் தோழர் சந்துரு உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். அவர்களைக் கண்டவுடன் அக்கும்பல் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டது. சக தோழர்களான காமராஜ், முருகன் ஆகியோரைப் பாதுகாக்க சந்துரு முயற்சித்தார். சந்துருவின் உடலைக் கொலையாளிகளின் ஆயுதங்கள் ஊடுருவின. அந்த நிலையிலும் தோழர்களைப் பார்த்து ‘தப்பி ஓடிவிடுங்கள்’ என சப்தமிட்டார். அவர்கள் தப்பிவிட்ட வெறியில் வெட்டுப்பட்டுக் கிடந்த சந்துருவின் கழுத்தில் கொடுவாளைப் பாய்ச்சினர். சந்துருவின் சப்தம் நின்றது.

தோழர் சந்துரு கொல்லப்பட்டது 1990 ஜூலை 15. அவர் பிறந்த தினம்  ஜூலை 19. அவர் மறைந்த நான்கு நாட்கள் கழித்து அவரது இல்லத்திற்குப் பிறந்தநாள் பரிசாக அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் பணியில் சேர வருமாறு பணி நியமன ஆணை வந்தது. ஆனால் அப்பணியை மேற்கொள்ள தோழர் சந்துரு உயிருடன் இல்லை. தோழர் சந்துரு போன்ற தியாகிகளின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளால்தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இன்னமும் உயிர்ப்புடன் இயங்கி வருகிறது.

===பெரணமல்லூர் சேகரன்===

;