tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்... தேவநேயப் பாவாணர் பிறந்த நாள்...

தேவநேயப் பாவாணர் 1902ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் நாள் பிறந்தார்.இவர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலானமொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிகஅரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக, பெருஞ்சித்திரனாரால் “மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்” என்று அழைக்கப்பட்டார்.“தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழி”யென வாதிட்டவர். “கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது” என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார்.

மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ்மாநாட்டில் பங்கேற்று, “மாந்தன் தோற்றமும், தமிழர்மரபும்” எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 ஜனவரி 15 அதிகாலை இயற்கை எய்தினார்.தமிழ் தேசியத் தந்தையாகப் போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு ஆசிரியராக இருந்த இவர், அவரின் தென்மொழி வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டார். தென்மொழி இயக்கமே அவரின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநின்றது. மொழிஞாயிறு பட்டமும் தென்மொழியே வழங்கியது.

பெரணமல்லூர் சேகரன்

;