tamilnadu

img

காலத்தை வென்றவர்கள் : சுப்பிரமணிய சிவா நினைவு நாள்....

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப்போராட்ட வீரர்களுள் முக்கிய ஆளுமையாய் விளங்கியவர்களுள் சுப்பிரமணிய சிவா குறிப்பிடத்தக்கவர். அரசியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காக அவர் போராடினார். தமிழக மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும்சிறந்த இதழாளர்; 1913-ல் ‘ஞானபாநு’ இதழைநடத்தினார். விடுதலைப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாருடனும் ,மகாகவி பாரதியாருடனும் நெருங்கிப்பழகியவர். இவர் ‘வீரமுரசு’ எனப் புகழப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் 1884–ஆம் ஆண்டு அக்டோபர் 4–ஆம் நாள் சிவா பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன். 1906–07–ல் திருவனந்தபுரத்தில் ‘தர்ம பரிபாலனசமாஜம் அமைப்பை, சுப்பிரமணிய சிவா உருவாக்கினார், இளைஞர்களை கூட்டுவித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, தேசபக்தி ஊட்டும் பணியில் ஈடுபட்டார். அதனால் இவர் திருவனந்தபுரத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.1908–ல் சிதம்பரனாரும், சிவாவும் இணைந்து நெல்லைச் சீமையில் சுற்றுப்பயணம் செய்து தேசிய பரப்புரை செய்தனர். 12.3.1908–ல் ராஜத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு 2.11.1912–ல் விடுதலையடைந்தார்.  பிறகு சிவா, சென்னையில் குடியேறி “ஞானபாநு” என்ற மாத இதழைத் தொடங்கினார். 1916–ல் ‘பிரபஞ்ச மித்திரன்’ என்ற வார இதழை ஆரம்பித்து சிலகாலம் நடத்தினார். 

1920–ல் கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குப் பிரதிநிதியாகச் சென்றார்.1921–ல் துறவி போன்று காவியுடை அணிந்து“ஸ்வதந்ரானந்தர்” என்ற பெயரையும் சூட்டிக்கொண்டார். பாரத மாதாவுக்குக் கோயில் ஒன்று கட்டி முடிக்கத் திட்டம் வகுத்தார். 17.11.1921–ல் இரண்டாவது முறையாக, தொடுக்கப்பட்ட ராஜத்துரோகக் குற்றத்துக்காக இரண்டரை ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் அங்கு, தொழு நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டார். படுத்த படுக்கையாகிவிட்ட நிலையில் 12.1.1922–ல் விடுதலையானார்.

1923–ஆம் ஆண்டு தொடக்கத்தில் தருமபுரி,கோவை, பாப்பாரப்பட்டி முதலான ஊர்களில்சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோயிலுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவ்வூரில் நிலம் பெற்று அதற்கு“பாரதபுரம்” என்று பெயர் சூட்டினார். கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவைச் சித்ரஞ்சன்

தாசைக் கொண்டு நடத்தினார். பின்னர் 23.7.1925 அன்று சிவா மறைந்தார். 

 பெரணமல்லூர் சேகரன்

;