tamilnadu

img

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று அரசு செய்ய வேண்டியது என்ன? சிபிஎம் முன்வைக்கும் ஆலோசனைகள்

சென்னை, மே 5 - சென்னையில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா தொற்றை பொதுமக்கள் ஒத்துழைப்பும், ஈடுபாடும் இல்லாமல் நோயை கட்டுப்படுத்த முடியாது. அதற்கு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஏ.பாக்கியம் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை) ஆகியோர் இணைந்து அனுப்பியுள்ள அந்த கடிதத்தின் விவரம் வருமாறு: உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலால் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

சென்னையில் பெருநகர மாநகராட்சி நிர்வாகமும், அரசும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மார்க்சிஸ்ட் கட்சி அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. இருப்பினும், சென்னையில் சமீப நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மக்களிடத்தில் அச்சத்தை உருவாக்கும் வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்து எங்களது கட்சியின் சார்பில் ஏப்.20 அன்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து, நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து பேசி மனு அளித்தோம். அவற்றை உதாசீனப்படுத்தக்கூடிய வகையிலேயே ஆணையரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது. எனவே, கீழ்கண்ட கோரிக்கைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

விரிவான திட்டமிடல் தேவை
1. கொரோனா நோய் தொற்றை அரசு மட்டுமே ஈடுபட்டு தடுக்க முடியாது. மக்களின் ஒத்துழைப்பும், ஈடுபாடும் இதற்கு அவசியமாகிறது. எனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஆலேசனைக் கூட்டத்தை நடத்தி விரிவான திட்டமிடலை செய்ய வேண்டும்.

2. கொரோனா நோய் தொற்று சென்னையில் சமூக பரவல் என்ற கட்டத்தை வந்தடைந்துள்ளதாக தெரிகிறது. 6, 5, 10, 9, 8, 4, 11 ஆகிய மண்டலங்களில் நோய்தொற்று எண்ணிக்கை மேலும் கூடுதலாகிக் கொண்டிருக்கின்றது. பாதிப்புக்குள்ளான பகுதிகளைச் சுற்றி தீவிர பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை
3. ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்பாக்கம் மருத்துவக் கல்லுhரி மருத்துவமனை, ஓமந்துhரார் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றில் நோய் தொற்றுக்கு உள்ளானவர்களால் நிரம்பி வழிகிறது. அங்கெல்லாம் இடமில்லை என்று பள்ளி மற்றும் கல்லுhரிகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்வதாக அறிகிறோம்.
பள்ளி மற்றும் கல்லுhரிகளில் மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் புதிதாக மேற்கொள்ள வேண்டும். மேலும், அடுத்த கல்வியாண்டு தொடங்கும் பொழுது குழந்தைகளுக்கும் வேறுபல சிரமங்கள் உருவாக்கும். ஆகவே, அதற்குப் பதிலாக பாதிப்புக்குள்ளான மண்டலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் கொரோனா சிகிச்சை பயன்பாட்டிற்கு கொண்டுவர அவசர நடவடிக்கை வேண்டும்.

தரமற்ற உணவு
4. கொரோனா தொற்றோடு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு போதுமான உணவு கிடைக்காமல் உள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோது வழங்கப்பட்ட உணவைப் போலன்றி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமானவுடன் தரமற்ற உணவு வழங்குவதாக நோயாளிகள் தெரிவிக்கின்றார்கள். இந்தக் குறைபாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்குசாவடி வாரியாக குழு
5. கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடங்களில் மக்களை வெளியே வராமல் தடுக்க அவர்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மட்டும் போதாது. வாக்குச் சாவடி வாரியாக அனைத்து கட்சி மற்றும் சமூக ஆர்வலர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும், மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாநகராட்சி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களையும் பயன்படுத்த வேண்டும்.

6. நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தொடர்ந்து அடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குச்சாவடி வாரியான கமிட்டி இதைக் கண்காணிக்கச் செய்ய வேண்டும்.

நாள் முழுவதும் கடைகள்
7. காய்கறி மார்க்கெட், ரேசன் கடை மற்றும் அம்மா உணவகங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கச் செய்வதை தீவிரப்படுத்த வேண்டும். நேரக் கட்டுப்பாடின்றி நாள் முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும். திடீர் திடீரென நேர மாறுதலை அறிவிக்கக் கூடாது.

ரூ.7500 நிவாரணம்
8. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சுமார் 40 நாட்கள் ஆகின்ற நிலையில் மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கு பணமின்றி தவிக்கின்றார்கள். அரசு அளித்த ஆயிரம் ரூபாய் மற்றும் நிவாரணப் பொருட்கள் போதுமானதாக இல்லை. பல குடும்பங்கள் குழந்தைகளுக்கு பாலின்றியும், பட்டினியாலும் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, அரசு குடும்பம் ஒன்றிற்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க வேண்டும்.

9. அம்மா உணவகங்களில் குறுகிய நேரத்திலேயே உணவு இல்லாமல் போகின்றது. போதுமான அளவிற்கு உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தவும், சமைப்பதற்கான ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் பொருட்களை அதிகப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

உரிமம் ரத்து
10. ஊரடங்கு காலங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்குவதை நிறுத்தக்கூடாது என்று அரசு அறிவித்தது. ஆனால், நடைமுறையில் பெரும்பாலான நிறுவனங்கள் மார்ச் மாத ஊதியத்தை அவ்வாறு வழங்கவில்லை. ஏப்ரல் மாதத்திற்கான ஊதியத்தையும் இதுவரை வழங்கப்படவில்லை. குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள், கடை மற்றும் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நட்சத்திர ஓட்டல் போன்றவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, மாநகராட்சி நிர்வாகம் அனைத்து நிறுவனங்களுக்கும் அரசின் உத்தரவை சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். அரசின் உத்தரவை அமலாக்க மறுக்கும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்.

11. கட்டுமானம், ஆட்டோ, தையல், இதர முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு அறிவித்தபடி ஆயிரம் ரூபாய் நிவாரனத் தொகை மற்றும் நிவாரனப் பொருட்கள் இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை. அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

களப்பணியாளர்கள் அனைவருக்கும் காப்பீடு
12. கொரோனா பாதித்தோர் பகுதிகளில், வீடுகளில் முழு பாதுகாப்பு உடை அணிந்தோரை (பிபிஇ) மட்டுமே கழிவுகளை எடுக்க பயன்படுத்த வேண்டும். மருத்துவர்களுக்கு அறிவித்ததைப் போல் கொரோனோ தொற்று தடுப்புப் பணியில் உள்ள துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து களப் பணியாளர்களுக்கும் 50 லட்சம் ரூபாய் காப்பீடு செய்ய வேண்டும். 

13. புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் துன்புற்று வருகின்றனர். அவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மளிகைச் சாமான்கள் அரசிடமிருந்து கிடைக்க செய்ய வேண்டும். இது குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டால் எவ்வித பதிலுமில்லை. மொழி தெரியாத அவர்களால் யாரிடமும் முறையிட முடியவிவில்லை. இதனை தங்களது கவனத்திற்கும் ஏற்கனவே கொண்டு வந்துள்ளோம்.
மேலும், இதர மாநில அரசுகளைப் போல் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவிப்பவர்களை பட்டியல் எடுத்து அரசு செலவில் அனுப்ப வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வீதிக்கு வரும் நிலை உருவாகி சமூக பதட்டம் ஏற்படும். அவசரகால நடவடிக்கையாக இதனை செய்ய வேண்டும்.

14. பெருநகர சென்னை மாநகராட்சி தொழிலாளர்களுக்கு போதுமான அளவில் சானிடைசர்ஸ், கிளவுஸ் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். வேலை முடிந்து கை கழுவ கோட்டங்களில் தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வழங்க வேண்டும். இது குறித்து பலமுறை உயர் அதிகாரிகளிடம் முறையிட்டும எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தொழிலாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஆகவே, தொழிலாளர்களுக்கு அவற்றை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

மேற்கண்ட அம்சங்கள் மீது அவசர அவசியம் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெல் மக்களோடு இணைந்து போராட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தின் நகல் பேரிடர் மேலாண்மை செயலாளர் மற்றும் சென்னை மண்டல கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.












 

;