tamilnadu

img

வேடந்தாங்கல் சரணாலய சுற்றளவு குறைக்கவில்லை

சென்னை:
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய சுற்றளவு குறைக்கப்படவில்லை என்று முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கூறியுள்ளார்.முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வன உயிரின சரணாலயமான 73.06 ஏக்கர் பரப்புள்ள வேடந்தாங்கல் ஏரி, பொதுப்பணித் துறையிடம் உள்ள பாசன ஏரி. அதைச் சுற்றியுள்ள 5 கி.மீ பரப்பளவில் உள்ள தனியார் பட்டா நிலம், வருவாய் நிலங்களும் சரணாலயமாக 1998-ம் ஆண்டு அறிவிக்கை செய்யப்பட்டது.இதில் வன நிலங்கள் ஏதும் இல்லை. மத்திய அரசு கூறியபடி அனைத்து சரணாலயங்களையும் வகைப்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வேடந் தாங்கல் சரணாலய ஏரியை சுற்றியுள்ள 5 கி.மீ நிலப்பரப்புகள், முதல் ஒரு கி.மீ தூரம் மையப் பகுதி என்றும் 1 முதல் 3 கி.மீ தூரம்வரை இடைநிலைப் பகுதியாகவும், 3 முதல் 5 கி.மீ. வரை சுற்றுச்சூழல் பகுதி என்றும் வகைப்பாடு செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஆனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் 5 கி.மீ சுற்றளவு பரப்பு குறைக்கப்படுகிறது என்று தவறான கருத்து வெளியாகி உள்ளது. அதை சரணாலயமாக அறிவிக்கப் பட்ட அரசாணையின் படி அங்குள்ள இடங்கள் எதுவும் வனகாப்பு நிலங்களாக இல்லை.

பொதுப்பணித்துறை பாசன ஏரி பரப்பளவான 73.06 ஏக்கர் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பரப்பளவும், 28 கிராமங்களைக் கொண்ட வருவாய்துறை மற்றும் தனியார் நிலப்பரப்பாகும். இந்த நிலப்பரப்பில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களுடைய சொந்த வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் வசித்து வருகின்றனர்.மேற்கூறிய 5 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் உள்ள நிலப்பரப்பில் வன நிலங்களோ, வனத்துறைக்கு சொந்தமான நிலங்களோ, எதுவும் கிடையாது. 5 கி.மீ. சுற்றளவு பரப்பளவில் உள்ள பொதுமக்கள் 1998-க்கு முன் பாகவே விவசாயம் மற்றும் பல்வேறு சிறு தொழில்கள் மற்றும் தங்கள் சொந்த இடங்களில் வாழ்வதற்கான சிறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் 5 கி.மீ. சுற்றளவு பரப்பை முறைப்படுத்தி சரணாலய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள 2009-ம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்பு உள்ளது போன்றே 5 கி.மீ. சுற்றளவும் எந்த குறைபாடும் இல்லாமல் பறவைகள் நிர்வாக பகுதியாகவே திகழும்.

வகைப்பாடு செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் தற்போதுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு பன்மடங்கு அதிகமான பாதுகாப்பை ஏற்படுத்துவதோடு சட்டப்படி சிறப்பாக நிர்வகிக்க முடியும். இதுபோன்ற நடவடிக்கைகளினால் பொதுமக்களின் வாழ்வாதாரம், விவசாயம் பாதிக்காது.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மற்றும் சுற்றியுள்ள 5 கி.மீ. பகுதியை எந்தவொறு தனியார் நிறுவனத்திற்கோ, தொழிற்சாலை அமைக் கவோ, வர்த்தக நிறுவனத்திற்கோ உதவவோ நடவடிக்கை எடுக்கவில்லை.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;