tamilnadu

வேதாந்தா கோரிக்கை: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

சென்னை, ஏப். 23-ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் பராமரிப்பு பணிக்கு குழு அமைக்க வேண்டும் என ஆலை நிர்வாகத்தின் சார்பில் வைக்கப் பட்ட கோரிக்கையை நிரகாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன்11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர் லைட் தாமிர உருக்கு ஆலை நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியவற்றை மாசுபடுத்தி தூத்துக்குடி நகருக்கும் அதன் சுற்று வட்டார மக்களுக்கும் இயற்கை சூழலுக்கும் பெரும் கேட்டினை ஏற்படுத்தியுள்ளதால் அதை நிரந்தரமாக மூடவேண்டும் என்று 22 ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் போராடி வருகின்றனர்.இதன் ஒருபகுதியாகக் கடந்தாண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றவர்கள் மீது காவல்துறை நடத்திய துப் பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் பலியானார்கள். எண்ணற்றோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தின் நிர்பந்தம் காரணமாக ஆலையை மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை நிர்வாகம் மனுத்தாக்கல் செய்தது. அதை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க உத்தரவிட்டது.இந்த உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிறுத்தி வைத்ததை அடுத்து வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆலையை திறக்க அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா குழுமத்திற்கு அறிவுறுத்தினர்.


இதையடுத்து வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், ஸ்டெர் லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஆலையை மூட பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில் எதிர்தரப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் தன்னை இணைத் துக் கொண்டார். இந்த வழக்கு செவ்வாய்க் கிழமை (ஏப். 23) நீதிபதிகள் சத்திய நாராயணன், நிர்மல் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை தரப்பில், ஆலையை பராமரிக்க தமிழக அரசு அமைத்துள்ள குழுவில், தங்களுக்கு திருப்தி இல்லை எனவும், எனவே தனியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.அதற்கு பதிலளித்த அரசு தரப்பு, ஸ்டெர்லைட் ஆலை முழுக்க முழுக்க தற்போது அரசு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையை மாவட்ட நிர்வாகம் தரப்பிலான குழு கண்காணித்து வருவதாகவும், ஆலையை கண்காணிக்க தங்களிடம் நிபுணத்துவம் பெற்றவர்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த அறிக்கையை மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், ஆலையின் பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய தனி குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது.


மேலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி கோரிய அனைத்து வழக்கு மனுக்களும் ஜூன் மாதம் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஷாஜி செல்லன், சுப்புமுத்துராமலிங்கம், பர்வின் பானு ஆகியோர் பங்கேற்றனர். இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன் கூறுகையில், 13 போராளிகளை சுட்டுக்கொல்ல காரணமாக இருந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்திலும் நீதிமன்ற வளாகத்திலும் ஜனநாயகப் பூர்வமாக போராடும் என்றார்.

;