சென்னை: பிஎச்.டி முடித்து தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கென, அண்ணா பல்கலைக்கழகம் முதன்முறையாக போஸ்ட் டாக்ட்ரல் பெல்லோஷிப் என்ற ஆராய்ச்சி மேற்படிப்பை அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக் கென போஸ்ட் டாக்ட்ரல் பெல்லோஷிப் எனப்படும் முனைவர் பட்டத்துக்குப் பிறகான ஆராய்ச்சி படிப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் உள்ளிட்ட நிறுவனங்க ளில் மட்டுமே வழங்கி வந்த பிடிஎப் ஆராய்ச்சி மேற்படிப்பை முதன் முறையாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள பல்கலைக்கழகம், பிடிஎப் ஆராய்ச்சி மேற்படிப்பை தொடர விரும்பும் மாணவர்கள், கல்வி தகுதியாக பிஎச்.டி பட்டம் பெற்றிருக்கவோ அல்லது படித்து கொண்டிருக்கவோ வேண்டும் என்றும், முனைவர் பட்டம் பெற்றவர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதற்கென www.annauniv.edu என்ற இணையதளம் மூலம் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், தேர்வாகும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 55 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.