‘காவலன்’ செயலியால் மீட்கப்பட்ட பெண்
சென்னை,பிப்.8- சென்னை நுங்கம்பாக்கத்தில் ஓட்டல் குளியல் அறையில் சிக்கிக்கொண்ட பெண்ணை காவலன் செயலி மூலம் காவல்துறையினர் மீட்டனர். நுங்கம்பாக்கம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூஞ்சோலை, முதல் நிலை காவலர் சங்கர் ஆகியோர் சம்பவத்தன்று மதியம் 12.30 மணிக்கு ரோந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரோந்து வாகனத்துக்கு ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவலன் செயலி மூலம் ஒரு பெண் உதவி கேட்டுள்ளார். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஓட்டலில் இருந்து இந்த தகவல் வந்து இருக்கிறது. உடனே அங்கு சென்று உதவுங்கள் என்று கட்டுப்பாட்டு அறை யில் இருந்து கூறப்பட்டது. உடனே உதவி ஆய்வாளர் பூஞ்சோலை, உதவி கேட்ட பெண்ணின் போன் நம்பரில் அவரை தொடர்பு கொண்டார். ‘நாங்கள் போலீஸ் உங்களுக்கு தேவையான உதவியை உடனே செய்ய தயாராக இருக்கி றோம். கவலைப்பட வேண்டாம்’ என்று கூறினார். இதையடுத்து, காவலன் செயலி மூலம் உதவி கேட்ட பெண்ணின் பெயர் மல்லிகா (35) என்றும், அவர் வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள ஓட்டல் குளியல் அறைக்கு சென்றபோது கதவை திறக்க முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்தார். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர், ஓட்டல் நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். பின்னர், மல்லிகா சிக்கிக் கொண்ட குளியல் அறையின் கதவை உடைத்து அவரை மீட்டனர். தகவல் கிடைத்த 15 நிமிடங்களுக்குள் பெண்ணை மீட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூஞ்சோலை, உடன் சென்ற முதல் நிலை காவலர் சங்கர் ஆகியோரை, சென்னை ஆணை யர் விசுவநாதன் அழைத்து பாராட்டினார். அவர்களுக்கு வெகு மதியும் வழங்கினார்.
லாரி - கார் மோதல்: பெண் பலி
அருப்புக்கோட்டை, பிப் 8 மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஞானராஜ். ஓய்வு பெற்ற பேராசிரியராவார். இவரும் இவரது மனைவி ஜோஸ்வின் மேரியும் திருச்செந்தூர் அருகே உள்ள மனப்பாடு கிறித்துவ ஆலயத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ஞானராஜ் ஓட்டினார். அருப்புக்கோட்டை பாலையம்பட்டி புறவழிச்சாலை அருகே வந்த போது, நிலைதடுமாறிய கார், தடுப்புச் சுவரைத் தாண்டி மறுபுறம் உள்ள சாலைக்கு சென்றது. அப்போது, தூத்துகுடியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஞானராஜ், ஜோஸ்வின்மேரி இருவரும் காய மடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து, இருவரையும் மீட்டு, அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஜோஸ்வின் மேரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஞானராஜ் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இச்சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பழனியில் மன நல காப்பகம் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
திண்டுக்கல்,பிப்.8- பழனியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் நகர்குழுக் கூட்டம் நகர் தலைவர் காளீ ஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் பகத்சிங், நகர் செயலாளர் தங்கவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றரன்.இந்தக் கூட்டத்தில், பழனியில் அரசு மன நலக்காப்பகம் அமைப்பதற்கு ரூ.13 லட்சம் ஒதுக்கப் பட்டது. நிதி ஒதுக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாகியும் பணிகள் தொடங்க வில்லை. விரைவாக அரசு மனநல காப்பகம் அமைக்க வேண்டும். வங்கி, திரையரங்குகள், திருமண மண்டபங்கள், அரசு, தனியார் நிறுவனங்களில் கைப்பிடியுடன் கூடிய சாய்வு தளம் அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 25-ஆம் தேதி பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவ தாக மாவட்டச் செயலாளர் பகத்சிங் தெரிவித்துள்ளார்.