tamilnadu

img

நியாயத்திற்கான போராட்டத்தை தடுக்கவே முடியாது: ஏ.கே.பத்மநாபன்

சென்னை, மே 2 -தொழிற்சங்கம் சட்டவிரோதம் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை என்று சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்.சிஐடியு தென் சென்னை மாவட்டம் சார்பில், 133வது மேதின ஊர்வலம் வள்ளுவர் கோட்டம் அருகிலிருந்து புறப் பட்டது. பேரா.இரா.காளீஸ்வரனின் ஜென்னிமார்க்ஸ் கலைக் குழுவினரின் வாத்தியங்கள் முழங்க நடைபெற்று புஷ்பா நகரில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏ.கே.பத்மநாபன் பேசியதாவது:-ராணுவகத்தில் மட்டுமே சங்கம் சேரும் உரிமை இல்லை. ஐஏஓ தீர்மானத்தின்படி சங்கம் சேரும் உரிமையை இந்திய அரசு அனுமதிக்கவில்லை. இருப்பினும், தொழிற்சங்கம் சட்டவிரோதம் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. நாடு விடுதலை பெறுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே (1926-லேயே) தொழிற் சங்கம் பதிவு பெறும் உரிமையை தொழிலாளி வர்க்கம் பெற்றுவிட்டது. மெட்ரோ ரயிலில் தொழிற்சங்கம் சட்டவிரோதம், போராட்டமும் சட்டவிரோதமும் என்று கூற ஒரு ஐஏஎஸ் அதிகாரிக்கு என்ன உரிமை உள்ளது? நியாயத்திற்கான போராட்டத்தை ஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது.பொதுத் துறை நிறுவனங்கள் நாட்டை பாதுகாக்க பிறந்தவர். அவற்றை மோடி கொலை செய்து கொண்டு இருக்கிறார். மோடியும், அதன் வகையறாக்களும் தொழிலாளி வர்க்க உணர்வுகளுக்கு கெள்கைகளுக்கு எதிரான சர்வாதிகாரி ஹிட்லரின் வாரிசுகள். எனவேதான், மகாராஷ்டிரா பாஜக அரசு, சிஐடியு தலைவர் டாக்டர் காரக்கை, நாசிக் நகருக்குள் நுழைய 2 வருடங்களுக்கு தடை விதித்துள்ளது.தீவிரவாதம் எந்த வகையில் வந்தாலும் அதனை செங்கொடி இயக்கமும், தொழிலாளி வர்க்கமும் எதிர்க்கும். கொள்கை மாற்றத்தை உருவாக்கும் வகையில் தொழிலாளி வர்க்கம் மாறாத வரை யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வருவார்கள். எதிர்காலம் போராட்டங்களின் காலம், முன்னேற்றங்களின் காலம். எனவே, கொள்கை மாற்றத்தை உருவாக்கும் வகையில் சபதமேற்போம்.இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் எம். குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் டி.ஏ. லதா, மாவட்ட பொருளாளர் ஏ. பழனி மற்றும் க. சுவாமிநாதன் (இன்சூரன்ஸ்), பா. பாலகிருஷ்ணன் (போக்குவரத்து), எஸ். பாலசுப்பிரமணியம் (ஆட்டோ) உள்ளிட்டோர் பேசினர்.

;