tamilnadu

img

அனைத்து மாநில மொழிகளையும் இந்திக்குப் பலிகொடுக்க முயலும் மோடி அரசு

சென்னை:
மத்திய பாஜக அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்த வரைவு நகல் கல்விமுறையை நாசமாக்கிவிடும் என்று பிரபல கல்வியாளர்களும் பொருளாதார நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.சென்னையில் பேராசிரியர் ஜவஹர்நேசன் எழுதிய புதிய கல்விக் கொள்கைவரைவு நகல் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில்  பேசிய பொருளாதார அறிஞரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக கவுரவப் பேராசிரியரு மான பிரபாத் பட்நாயக், தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்துவதற்குப் பதிலாக அதைச் சீர்குலைக்கும் வகையில் வரைவு நகலில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் உள்ளன என்றார். புதிய கல்விக்கொள்கை இந்துத் துவா உணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று குற்றம்சாட்டி னார். இந்துத்துவா கொள்கைகளை கல்வித்துறையில் பரவலாக்கும் வகையில் பல யோசனைகள்  அதில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நாட்டிற்காகப் பாடுபட்ட பல தலைவர்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கல்வித்திட்டம்இருக்கவேண்டும். ஆனால் மத்தியபாஜக அரசின் வரைவுத்திட்டத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த பகுதிகள் உள்ளன. ஆனால் நாட்டின் முதல் பிரதமர் பண்டித நேரு குறித்து எந்த தகவலும் இல்லை. கஸ்தூரி ரங்கன் போன்ற பிரபல விஞ்ஞானிகள் எப்படி நேருவை மறந்தார்கள் என்பது வியப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

“ அறிவு சார்ந்த பொருளாதாரத்தை ஏற்படுத்த இதுபோன்ற புதியகல்விக்கொள்கையை வகுத்திருப்ப தாக அதை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். அப்படி என்றால் உண்மையிலேயே திறமை வாய்ந்த நபர்களை அது அடையாளம் காட்டியிருக்க வேண்டும். மாறாக வேறுவிதமான விஷயங்களையே அது பேசுகிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.உயர்கல்வி நிறுவனங்கள் மீதான தாக்குதல் இந்துத்துவா சக்திகளின் அடுத்தகட்ட இலக்கு என்றும் இதன் ஒருபகுதியே ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புனே திரைப்பட பயிற்சி கழகம், ஹைதராபாத்தில் உள்ள மத்திய பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடுகளும் நடவடிக்கைகளும் என்றும் அவர் சாடினார்.  காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கியபோது படிப்பைக் கைவிட்டுவிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ளும்படி  கல்லூரி மாணவர்களுக்கு அழைப்புவிடுத்தார். அதை அவர் நியாயப்படுத்தினார். ஆங்கில ஆட்சியாளர்களுக்குச் சேவை செய்யக்கூடியதாக அப்போதிருந்த கல்வி முறை உள்ளதாக காந்தி கூறினார் எனவும் பிரபாத் பட்நாயக் சுட்டிக்காட்டினார்.

உலகமயக் கொள்கைகள் இந்தியக்கல்வித்துறையில் பெரும் விளைவு களை ஏற்படுத்தி வருகின்றன. அதனைச்சமாளிக்கும் வகையில் இந்த கொள்கை இல்லை. இந்தி திணிப்புக்குத் தமிழகம் கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகிறது. மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளையும் இந்திக்குப் பலிகொடுத்து அந்த மொழியைப் பரவ லாக்க முயற்சித்து வருகிறது. அறிவியல் பாடத்தைக் கூட அந்தந்த மாநில மொழிகளில் கற்றுக்கொடுத்தால் மாணவர்களுக்கு  எளிதாகப் புரியும். ஆங்கிலத்திற்கு மாற்று இந்தி அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்று அந்தந்த மாநில மொழிகளே. இந்தி திணிப்பு எல்லாம் இந்துத்துவா திட்டத்தின் ஒரு பகுதியே. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியபோதும் நாம் அனைவரும் இந்தியர் என்ற உணர்வுடன் போராடினோம். ஆனால் இன்று பாஜக நாம் அனைவரும் ‘இந்துக்கள்’ என்ற உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி மத ரீதியாக மக்களைத் திரட்ட முயற்சிக்கிறது. 

ஒரே வரி, ஒரே மொழி, ஒரே கட்சி,ஒரே தலைவர் இவை அனைத்தும் இந்துத்துவ தேசிய வாதத்தை ஏற்படுத்தவே உதவும். தூய்மை பாரதம் பற்றி பாடம் இருந்தால் சாதிய முறை குறித்தும் அதில் குறிப்பிட வேண்டும். ஆனால் அதையெல்லாம் ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்றும் விளக்கினார் பேரா. பிரபாத் பட்நாயக்.தமுஎகச கவுரவத்தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, முனைவர் எஸ்.ராஜா சாமுவேல், முன்னாள் துணைவேந்தர் ரமேஷ் கசட்வார்,சென்னை சமூகப்பணி கல்லூரி நூலகர் வே.சக்திரேகா, பெருந்திரள் பங்கேற்பு அமைப்பாளர் கே.மணவாளன், ஆய்வு நிறைஞர் தீபா, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பாரதி புத்தகாலயம் நிர்வாகி நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்ட னர். பாரதி புத்தகாலய நிர்வாகி ப.கு.ராஜன், தமுஎகச தென்சென்னை மாவட்டச் செயலாளர் வெ.இரவீந்திர பாரதி,வடசென்னை மாவட்டச் செயலாளர் டி.இராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

;