கிழக்கு தஞ்சை மாவட்டத்தில் நில உடைமை ஆதிக்கத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய அளப்பரிய போராட்டத்தின் அனுபவங்களை தொகுப்பதும், எழுதுவதும் எளிதானதல்ல. ஆந்திர மாநிலம் தெலுங்கானாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய புரட்சி ஆயுதம் தாங்கிய போராட்டம் என்றால் கீழ தஞ்சையில் நடைபெற்ற மக்கள் போராட்டம் சமூகநீதி எனும் ஆயுதத்தை தாங்கி நடத்திய போராட்டமாகும்.
திருச்சி சிறையில் விஷம் கொடுத்து கொல்லப் பட்ட களப்பால் குப்பு, காவல்துறையால் சுட்டுக்கொல் லப்பட்ட மாபெரும் வீரன் சிவராமன், வாட்டாக்குடி இரணியன், ஆம்பலாப்பட்டு ஆறுமுகம், என்.வெங்கடாசலம், பூந்தாழாங்குடி பக்கிரி, சிக்கல் பக்கிரி, அம்மையப்பன் கண்மணி, குடவாசல் தங்கையன், தியாகி நாவலன், இப்போதும் நம் இதயத்தில் எரிந்துக்கொண்டிருக்கும் வெண்மணி நெருப்பில் வெந்த 44 தியாகிகள், விவசாயிகள் இயக்கத்தின் தீரமிக்க தலைவர்கள் மணலி கந்தசாமி, காத்தமுத்து, பி.எஸ்.தனுஷ்கோடி, எம்.பி.கண்ணுசாமி, வேயன்னா என்று அழைக்கப்பட்ட வேதையன், வெண்மணி நாயகன் மீயன்னா என்ற மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட தலைவர்களின் தியாகத்தையும், வீரத்தையும் சொல்லிக் கொண்டே போக முடியும்.
தென்பரை துவங்கி வெண்மணி, திருமெய்ஞானம் தியாகம், நில சீர்திருத்தத்துக்கான இயக்கம் என ஏராளமான பதிவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தகைய நிகழ்ச்சி போக்குகளில் தோழர்.கோ.வீரய்யன்அவர்களின் பங்கு மகத்தானதாகும். இந்திய கம்யூனிஸ்ட்கட்சியில் தத்துவார்த்த அரசியல் கருத்து முரண்பாடுகள்முற்றிய நிலையில் 1964-ம் ஆண்டின் முற்பகுதியில் கும்பகோணத்தில் நடைபெற்ற மாகாண கவுன்சில் கூட்டத்தில்தோழர்.கோ.வீரய்யன் உள்ளிட்ட 29 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதுதான் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி கூட்டமாகும். அகில இந்திய அளவில் 1964-ல்ஏப்ரல் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டு32 தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினார்கள். அதை தொடர்ந்து தமிழகத்தில் மாகாண கவுன்சிலிலிருந்து வெளியேறிய தோழர்.என்.வரதராஜன் உள்ளிட்ட 29 உறுப்பினர்களும் ஒன்று கூடி தமிழகத்தில் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்திற்கு வித்திட்டார்கள். அதில் தோழர்.கோ.வீரய்யன் அவர்களுக்கு முக்கிய பங்குண்டு.
கீழவெண்மணி சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்ட உழைப்பாளி மக்களுக்கு வீடுகள் அமைத்து தருவது, அரசுக்கு பாதிக்கப்பட்ட மக்களின் கள நிலவரங்களை சுட்டிக்காட்டி அறிக்கை விடுவது, சம்பவத்தைக் கண்டித்துமக்களைத் திரட்டி மாவட்டம் முழுவதும் போராட்டம் நடத்தியது, நீதிவேண்டி நீதிமன்றத்தை அனுகி வழக்குகள் நடத்துவது போன்ற முக்கியமான பணிகளில் இயக்கத் தோழர்களோடு முன்னின்று செயல்பட்டார். 1969-ல் கணபதியாபிள்ளை குழு அமைவதற்கும், அதில் ஏற்பட்ட தொழிலாளர் விரோத கோரிக்கைகளை சுட்டிக்காட்டியதிலும் தோழர்.கோ.வீரய்யனுடைய பங்களிப்பு மகத்தானதாக இருந்தது.நாகை சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை இருந்து தொகுதி மக்களின் கோரிக்கைகளை சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்தார். தொகுதி மக்களுடைய தேவைகளை அறிந்து அரசியல் பாகுபாடு இல்லாமல் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றடைய அரும்பாடுபட்டார். காவிரி நடுவர் மன்றம் அமைக்கவலியுறுத்தி டெல்டாவில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் முக்கிய பங்காற்றினார்.
தோழர் கோ.வீரய்யன், என்.வரதராஜன் உள்ளிட்ட 29 உறுப்பினர்களும் 16 மாதகாலம் கடலூர் சிறையில் ஒன்றாக இருந்துள்ளனர். அதைத் தொடர்ந்து தோழர்கோ.வீரய்யன் மக்கள் போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைச் சென்றுள்ளார். கொலை வழக்கு, கொலைமுயற்சி வழக்கு, வெடிகுண்டு வழக்கு என அவர் சந்திக் காத வழக்குகளே இல்லை எனசொல்லலாம். ஓய்வறியா போராளியான அவர் கீழத்தஞ்சைமாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று விவசாயிகள் சங்கத்தையும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தையும் உருவாக்குவதற்கு அரும்பாடு பட்டார்.தமிழக அரசாங்கம் அமைத்த அனைத்து விவசாய உயர்மட்ட குழுக்களிலும்இருந்து பணியாற்றிய ஒரே தலைவர் அவர்தான். விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம், கரும்புவிவசாயிகள் சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் போன்ற பலசங்கங்களின் செயல்பாட்டிலும் அதன் உருவாக்கத்திலும்அவரின் பங்கு மகத்தானது. இத்தகைய அமைப்புகள்இன்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்பதே அவருடைய பணியின் சிறப்பை எடுத்துக்காட்டும்.