tamilnadu

img

நூறுநாள் திட்டத் தொழிலாளர்களுக்கு 5 மாத சம்பளப் பாக்கி ரூ.960 கோடியை விடுவித்தது மத்திய அரசு.... விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தொடர் போராட்டம் - தலையீடுகளால் வெற்றி....

சென்னை:
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் விவசாயத் தொழிலாளர்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் மற்றும் தலையீடுகளால் நூறு நாள் வேலைத் திட்டத் தொழிலாளர்களுக்கு 5 மாத சம்பள பாக்கியான ரூ.960 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இது விவசாய தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

இதுகுறித்து விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் வேலை செய்து 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் மத்திய அரசு காலம்தாழ்த்தி வந்த நிலையில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தொடர் தலையீடு மற்றும் மாநிலம் முழுவதும் நடைபெற்றப் போராட்டங்களால் தற்போது கூலி பாக்கியை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டவேலையின்மை கிராமப்புற உழைப்பாளிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைத் தந்துள்ளது. கிராமப்புற மக்களுக்குவேலைவாய்ப்பளிக்கும் ஊரக வேலைத்திட்ட த்தையும் முழுமையாக செயல்படுத்தாமல் சட்டத்திற்கு புறம்பாக எந்திரத்தையும் - ஒப்பந்ததாரர்களையும் ஈடுபடுத்தும் வேலைகளை செய்து, திட்டத்தை சிதைக்கும் நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் அற்ப சொற்பமாக அளிக்கப்பட்ட வேலைக்கும் உரிய காலத்தில் தொழிலாளர்களின் கூலியை வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படுவதில்லை. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வேலைசெய்த தொழிலாளர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை.அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்தது.

மாநில ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடமும் சம்பளப்பாக்கி குறித்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. கடந்த 31.12.2020 அன்றுமத்திய செயற்குழு உறுப்பினர் எஸ்.திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மாநிலச்செயலாளர் ஏ.பழநிசாமி ஆகியோர் தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் இயக்குநர் பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து மனு அளித்து சம்பள பாக்கியை உடனடியாக வழங்கிட வலியுறுத்தினர்.இந்நிலையில், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் கடந்த 1.1.2021 அன்று தமிழ்நாட்டிற்கு வழங்கிட வேண்டிய ஊரக வேலைத்திட்டத்தின் கூலிபாக்கி தொகையான ரூ.960 கோடியை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஊரக வேலைத்திட்டத் தொழிலாளர்களுக்கான கூலி பாக்கி ஓரிரு தினங்களில் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை நெருங்கும் வேளையில் ஊரக வேலைத்திட்டத் தொழிலாளர்களின் கூலி பாக்கி கிடைப்பது அவர்களின் சிரமத்தை ஓரளவு தீர்க்க உதவும். இது விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தொடர் போராட்டங்களுக்கும் - முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும். ஊதியத்தை விரைவாக அனுப்பி வைப்பதையும் தொடர்ந்து வேலை வழங்குவதையும் தினக்கூலி ரூ.256 முழுமையாக வழங்குவதையும் மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்.அத்தோடு மாநில அரசு பொங்கலுக்கு ரூ.2500 குடும்பஅட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதை கொரோனா, புயல், மழை, வேலையின்மை இவைகளை கணக்கில் கொண்டு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;