tamilnadu

பொன்.மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

சென்னை, ஏப். 26-சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவில் காவல் ஆய்வாளராக இருந்த காதர் பாஷா உள்பட பல அதிகாரிகள், பழங்கால சிலைகளை சர்வதேச கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந் தது. இதுகுறித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விசாரித்தார். இந்த விசாரணையின்போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பொன்.மாணிக்கவேல் பணியாற்றினார். சிலைக்கடத்தல் குறித்து விசாரணை தொடங்கிய நிலையில், திடீரென ரயில்வே ஐ.ஜி.யாக பணி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரங்களுக்கு இடையே, காவல்துறை ஐ.ஜி.யாக இருந்து ஓய்வுபெற்ற நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, காவல்துறை அதிகாரிகள் 66 பேர் சார்பில், தனியாகவும், முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இரு தரப்பு வாதங்களும் விசாரணையும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த முறையீட்டு வழக்கில் ஏப்.26 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் விசாரணைக்கு உகந்தது அல்ல எனக்கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கோரிக்கையினை ஏற்கனவே நிராகரித்த நிலையில், காவல் துறை அதிகாரிகளின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.

;