tamilnadu

img

ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் ஸ்டெர்லைட்டுக்கு தற்காலிக அனுமதி... அரசு கூட்டிய அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு....

சென்னை:
ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக அனுமதி அளிக்கலாம் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்பட்டபெரும்பாலான மக்களை காப்பாற்ற ஆக்சிஜனின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் திங்களன்று (ஏப்.26) தலைமை செயலகத்தில் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது.

இதில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திமுக சார்பில் கனிமொழி எம்.பி., ஆர்.எஸ். பாரதி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்கே.பாலகிருஷ்ணன், அ.சவுந்தர ராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்இரா. முத்தரசன், மு. வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே.வி. தங்கபாலு, டாக்டர் கே. ஜெயக்குமார் எம்.பி., பாஜக சார்பில் எல்.முருகன், கே.டி. ராகவன், பாமக சார்பில் ராதாகிருஷ்ணன், ஏ.கணேஷ் குமார், தேமுதிக சார்பில் எஸ். அன்புராஜ், வி.டி.பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சர்

இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதன் சுருக்கம் வருமாறு:

மாநிலத்தில் கோவிட் மருத்துவமனையிலும், கோவிட் சிறப்பு மையங்களிலும் 98,113 படுக்கைகள் உள்ளன. இதில் ஆக்சிஜன் வசதியுடன்கூடிய 34,150, ஐசியு வசதியுடன் 7,362படுக்கைகளும், 6,517 வெண்டிலேட்டர் களும் தயார் நிலையில் உள்ளன. தற்போது கூடுதலாக 15,000 மருத்துவ பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். உயிர் காக்கும் உயரிய மருந்துகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. இதுவரை 52 லட்சத்து 61 ஆயிரம்பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மே 1 ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப் படும்.இன்றைய தினம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது. இருப்பினும், கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது.உச்சநீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்காலமனுவில், தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்திலுள்ள இரண்டு ஆக்சிஜன் வாயு உற்பத்தி கூடத்திலிருந்து நாளொன்றுக்கு வாயு நிலையிலுள்ள ஆக்சிஜன் 1050 மெட்ரிக் டன் உற்பத்தி செய்ய முடியும். அதனை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கும் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களின் கொரோனாசிகிச்சைக்கு தேவைக்கேற்ப இலவசமாக விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கேட்டுள்ளது.

 இந்த மனு மீது ஏப்.22, 23 தேதிகளில் விசாரணை நடந்தது. மேலும், தமிழ்நாடு அரசின் பதில் மனுவை தாக்கல்செய்ய உத்தரவிட்டது. இந்த வழக்குஏப்.26 அல்லது 27ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அரசின்நிலைபாட்டை தெரிவிக்க வேண்டும்.தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தால், ஒரு முக்கியமான நிலையில், சோதனையான நிலையில் இருக்கின்றோம். மக்களுடைய உயிரை காப்பாற்றுவது அனைவருடைய கடமை. அதனடிப்படையில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.

கனிமொழி
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிஎம்.பி., “ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட “காலவரம்பிற்கு” மட்டும் தற்காலிகமாக அனுமதிக்கலாம். வேறு எந்த வடிவிலும் ஆலையை இயக்கக்கூடாது. ஆக்சிஜன் மட்டும்  தயாரிக்கப்படு வதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர், மக்கள் நல்வாழ்வுத் துறை திகாரிஆகியோர் தலைமையில் ஒரு குழு அமைத்திட வேண்டும். அதில், தூத்துக்குடி மாவட்ட மக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும்.தற்போது வழங்கப்படும் தற்காலிக அனுமதியை வைத்து ஆலையை நிரந்தரமாக திறக்க அனுமதி கோரக் கூடாது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை தமிழக மக்களுக்கு தேவைப்படும் அளவிற்கு இலவசமாக அளிக்க வேண்டும்.

ஆலை இயங்க தமிழக அரசுதான் மின்சாரம் வழங்க வேண்டும்” என்றார்.இதன்பின்னர் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:1.    உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்திமற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கி கொள்ள தற்காலிகமாக (நான்கு மாதங்களுக்கு மட்டும்) கொரோனா தொற்று காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம். ஆக்சிஜனின் தேவையைக் கருத்தில் கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம். இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும், தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித உற்பத்தியையும், மின் உற்பத்தி அலகையும் எக்காரணம் கொண்டும்திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த குறிப்பிட்டகாலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.2. உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் வாயுவில் தமிழ்நாட்டிற்கேமுன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவைபோக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.

3. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பகுதியில், ஆக்சிஜன் உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய  தொழில் நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதி சீட்டுடன் அனுமதிக்கப் படுவார்கள். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும். எக்காரணத்தைக் கொண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகையும்செயல்பட அனுமதிக்கப்படாது.4. இந்நேர்வில், தற்காலிக ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். கண்காணிப்புகுழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம்,  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர், ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள் மற்றும் அந்த பகுதியைசார்ந்த பொதுமக்கள்/ சுற்றுச்சூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரிலிருந்து மூன்று நபர்கள் இக்கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர். இந்த குழு, ஆக்சிஜன் தயாரிக்கும் முழு பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்த குழு முடிவெடுக்கும்.  
5. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள ஆக்சிஜன் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், காவல்துறை தலைமை இயக்குநர் ஜெ.கே. திரிபாதி,மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்   உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

                                      ****************

“ஆலையை கையகப்படுத்தி அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருக!”

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சிகளை கூட்டத்திற்கு அழைத்திருக்க வேண்டும் என்று என்று வலியுறுத்தினோம். வேதாந்தா நிறுவனம் உள்நோக்கத்தோடு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிபெற்று அதன்மூலம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கிறது. ஆக்சிஜன் தயாரிக்க வேறுபல வாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும்.இதைத் தவிர வேறுவழியே இல்லையென்றால் ஸ்டெர்லைட் ஆலையை மொத்தமாக கையகப்படுத்தி மாநில அரசு கட்டுப்பாட்டில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டும். அதற்கு முன்பாக தூத்துக்குடி மக்களை அழைத்துப்பேசி, அவர்களின் ஒத்துழைப்போடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லாவிடில் பதற்றம் ஏற்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தினோம்.

அதற்கு, மாவட்ட ஆட்சியர் வாயிலாக அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் ஒத்துழைப்போடு திட்டத்தை செயல்படுத்துவோம். ஒசூரில் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அது செயல்பாட்டிற்கு வர காலதாமதமாகும். ஏற்கெனவே உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை முழுமையாகப் பயன்படுத்தி வருகிறோம். திடீரென்று மின்வெட்டு அல்லது விபத்து ஏற்பட்டால் உற்பத்தி பாதிக்கும். மேலும், அடுத்த 15 நாட்களில் ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும் போது அதை ஈடுகட்ட தற்போதுள்ள உற்பத்தி நிலையங்களால் முடியாது. இத்தகைய சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. 3-ஆம் பக்கத் தொடர்ச்சி ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது... 

;