tamilnadu

img

இலங்கையில் தமிழர்கள் நிலங்கள், பண்பாட்டுத் தளங்களை அபகரிக்கும் முயற்சி! இந்திய அரசு நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

இந்திய அரசு தனது ராஜ்ய உறவை பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தையும், பண்பாட்டுத் தளங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பரவலும் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சுயாட்சியும் அளிக்க வேண்டுமென்ற நீண்ட கால பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. ஆனால், இலங்கைத் தமிழர்களின் எஞ்சியுள்ள உரிமைகளும், வாழ்வாதாரங்களும் பறிபோகும் நிலைமை அங்கு உருவாகி வருகிறது என ஊடகங்களில் ஏராளமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

கிழக்கு, மட்டக்கிளப்பு மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் இலங்கை அரசினுடைய வனத்துறையினர் இரவோடு இரவாக தமிழ் விவசாயிகளின் நிலங்களில் எல்லைக் கற்களை நட்டுள்ளனர். காலம் காலமாக இலங்கைத் தமிழர்கள் வசித்து வந்த, சாகுபடி செய்து வந்த நிலங்களை வனத்துறைக்குச் சொந்தமானது என கூறி தமிழர்களை அவர்களுடைய சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றிட இலங்கை அரசு முயற்சித்து வருகிறது.

சம்பந்தப்பட்ட கிராமத்தில் 35 குடும்பங்களே வசித்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையினர் தலா 5 ஏக்கர் நிலங்களில் மட்டுமே சாகுபடி செய்யக் கூடிய சிறு-குறு விவசாயிகளாக உள்ளனர். தமிழர்களுடைய வாழ்வாதாரத்திற்கு ஆதாரமான நிலங்கள் பறிக்கப்பட்டு வீதிக்கு தள்ளக் கூடிய அபாயம் உருவாகி வருகிறது.

மேலும், கிராமங்களுக்கு அருகில் உள்ள சாகுபடி நிலங்களில் பெரிய, பெரிய இயந்திரங்களை வைத்து மணல் அள்ளும் வேலை வேகமாக நடந்து வருகிறது.  தமிழர்கள் வாழக் கூடிய இன்னும் சில பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்தும் வேலையும் நடந்து வருகிறது.

தொல்லியல்துறை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. சிங்களர்களும், பௌத்த மதக்குருக்களும் அக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர். தொல்லியல்துறை ஆய்வு என்ற பெயரில் ஆண்டாண்டு காலமாக தமிழர்களின் வழிபாட்டு தளங்களாக உள்ள கோயில்களை பௌத்தர்களின் வழிபாட்டு இடம் என அறிவிப்பார்களோ என்ற அச்சம் தமிழர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரமான நிலங்கள், பண்பாட்டுத் தளமான கோயில்கள் ஆகியவற்றை இலங்கை அரசினுடைய நிறுவனங்கள் அபகரிக்கக் கூடிய ஆபத்து உருவாகி வருகின்றன. இந்திய அரசு தனது அரசுமுறை உறவை பயன்படுத்தி இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரங்களையும், நிலங்களையும், வாழ்விடத்தையும், பண்பாட்டுத் தளங்களையும் பாதுகாத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய அரசை வற்புறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;