tamilnadu

சமூக விரோதிகளை கைது செய்ய தயங்கும் தமிழக அரசு போராடும் விவசாயிகளை சிறையில் அடைப்பது அடக்கு முறையின் உச்சம்- சிபிஎம் கண்டனம் 

பொள்ளாச்சி வன்கொடுமையில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கைது செய்ய தயங்கும் தமிழக அரசு போராடும் விவசாயிகளை சிறைஅடைப்பது அடக்கு முறையின் உச்சம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

தமிழகத்தில் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், விவசாயிகளது விளை நிலங்களில் உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. தனியார் மின்உற்பத்தி

நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பல மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு இத்தகைய மின்கோபுரங்கள் அமைக்கப்படுகின்றன. மின்கோபுரம் அமைப்பதால் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்படுவதை தவிர்த்திட, மின்கோபுரங்கள் அமைப்பதற்கு மாறாக, கேபிள்கள் மூலம் மின்சாரத்தை எடுத்துச் செல்ல வேண்டுமென கடந்த பலமாதங்களாக விவசாய சங்கங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு இவர்களது கோரிக்கைகளை செவி மடுக்க மறுத்து வருவதுடன், விவசாயிகள்அனுமதி பெறாமலேயே விளை நிலங்களில் மின்கோபுரங்களை அமைத்து வருகிறது.

இதனை எதிர்த்து கடந்த 2019 மார்ச் 15 அன்று போராட்டம் நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் ஏ. முனுசாமி, மாவட்டச் செயலாளர் கே. பெருமாள், ஒருங்கிணைப்புக்குழுவின்தலைவர் வழக்கறிஞர் ஈசன், துணைத்தலைவர் கவின், தற்சார்பு விவசாய சங்க தலைவர் கி.வெ. பொன்னையன் மற்றும் 7 விவசாயிகளையும் சேர்த்து 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தாலும் வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பொள்ளாச்சியில் குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்வதற்கு தயங்கும் தமிழக அரசு, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளை கைது செய்து சிறையில்அடைப்பது அடக்குமுறையின் உச்சமாகும்.

மீண்டும், மீண்டும் விவசாயிகளை கைது செய்து, சிறையில் அடைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உடனடியாக கைது செய்யப்பட்டுள்ள விவசாயிகளை எவ்வித நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

;