tamilnadu

img

கல்லூரி விண்ணப்பப்படிவத்திற்கு கூடுதலாக பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக...

சென்னை:
கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பப்படிவத்திற்கான கட்டணத்தை விட கூடுதலாக பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த இருபதாம் தேதி முதல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் பதிவு செய்திட தமிழக அரசு அறிவித்திருந்தது. பெரும்பாலான மாணவர்கள் இணையத்தில் விண்ணப்பிக்க தனியார் இணையதள மையங்களுக்கே செல்ல வேண்டியுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் இணைய மையங்களை வைத்திருக்கும் நபர்கள், மாணவர்களின் விண்ணப்பக்கட்டணத் தொகையைவிட கூடுதலாக வசூலிக்கின்றனர். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது, என்றபோதிலும், சில இடங்களில்  இணைய பயன்பாட்டு தொகைபோக மேலும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மேலும் விண்ணப்பப்படிவம் 50 ரூபாய் மட்டுமே, ஆனால் விண்ணப்பிக்க 200 ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது. ஒரு மாணவன் இரண்டு, மூன்று துறைகளுக்கு விண்ணப்பித்தால் 600,800 ரூபாய் என இணைய மையங்கள்  மாணவர்களிடம் பணத்தை கொள்ளையடிக்கின்றன.   

எனவே தமிழக அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆகவே திறந்திருக்கும் சில இணைய மையங்களில்  கூட்டம் அலை மோதுகிறது. இதைப் பயன்படுத்தியே பணக்கொள்ளை அடிக்கின்றனர். மேலும் கூட்டம் அலைமோதுவதால்  கொரோனா தொற்று பரவும் இடமாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆகவே அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் இலவசமாக மாணவர்கள் விண்ணப்பிக்க கூடுதலான இணையச் சேவை மையங்களை, சிறப்பு முகாம்களை அமைத்து ஏழை,எளிய குடும்பத்து  மாணவர்கள் பயன்பெறும் வகையில்  அரசு உதவிட வேண்டும்.

மாற்று சான்றிதழ் பெற வசூலிக்கப்படும் தொகையை தடுத்து நிறுத்து!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வரும் நாட்களில் துவங்க உள்ள நிலையில் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்ப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளில் முறையே 5, 8, 9 ஆம் வகுப்புகளை படித்து முடிக்கும் மாணவர்கள் 6, 9, 11 ஆகிய வகுப்புகளில் சேர்ந்திட ஏற்கனவே தாங்கள் படித்த பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் வாங்க வேண்டியுள்ளது. இவ்வாறு மாற்றுச்சான்றிதழ் பெறும் மாணவர்களிடம் அப்பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறது. இவ்வாறு கட்டணம் வசூலிப்பது சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையாகும். இதனை தடுத்து நிறுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;