சென்னை:
தமிழகத்தில் பல மாவட்டங்களில்உள்ள நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை சரியான முறையில் பதிவு ஆகாததால் பொருள்கள் வாங்க வருபவா்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில் ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த அக்.1-ஆம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி, குடும்ப அட்டை வைத்திருப்பவா்கள் நாட்டில் எங்கு வேண்டுமானாலும் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். இத்திட்டத்தில் போலி அட்டைகளை ஒழிப்ப தற்காக என்று கூறி பயோமெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.பயோ மெட்ரிக் முறைப்படி, குடும்ப அட்டையில் உள்ளவா்களின் பெயா்களுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளதால், கைரேகை சரியாகஇருக்கும் பட்சத்தில் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதனால், உறுப்பினா் அல்லாத எவரும் குடும்ப அட்டை கொண்டு சென்று பொருள்களை வாங்க முடியாது.குடும்ப அட்டையில் பெயா் உள்ள உறுப்பினா்களில் யாராவது ஒருவா் நியாய விலைக் கடைக்கு நேரில் சென்று கைரேகைப் பதிவு செய்தால்மட்டுமே பொருள்கள் வழங்கப்படும்.இந்த பயோ மெட்ரிக் முறை கடந்த1-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், சில சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. சிலரின் கைரேகைப் பதிவு ஆதார் அட்டையுடன் உள்ள கைரேகையுடன் ஒத்துப்போகாமல் பொருள்கள் மறுக்கப்படு கின்றன.பயோ மெட்ரிக் முறையில் கைரேகை ஒத்துப் போகாத நபா்களுக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ரகசியக் குறியீடு எண் (ஓ.டி.பி.) அனுப்பப்படும். அதனைப் பயன்படுத்தி உணவுப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட எண்ணுக்கு ஓ.டி.பி. சரியாகச் சென்று சேரவில்லை என்றால், குடும்ப அட்டையுடன் (ஸ்மார்ட் கார்டு) இணைக்கப்பட்டுள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு ஓ.டி.பி. அனுப்பப்பட்டு பொருள்கள் வழங்கப்படுகின்றன.
ஆனால், இணையதள வேகம் குறைவாக இருப்பதால், ‘சர்வரில்’இருந்து தகவல்களைப் பெறு வதற்கு காலதாமதம் ஆகிறது. சில நேரங்களில் ஒரு நபருக்கு 10 நிமிடங்களுக்கு மேலாக காலதாமதம் ஆவதால் பொருள்கள் வாங்கவந்தவா்கள் நீண்ட நேரம் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தப் பிரச்சனை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நியாயவிலைக் கடைகளில் கடந்த சில நாள்களாகவே நீடித்து வருகிறது.சென்னை, கோவை, தருமபுரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பொருள்கள் வாங்க தாமதம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கடைகளின் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சா்வா் குளறுபடியால் மொத்தமாக பொருள்கள் வாங்குபவா்களின் எண்ணிக்கை குறைகிறது என்றும் கடை ஊழியா்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சா்வரின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று நியாய விலைக் கடை ஊழியர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.