tamilnadu

img

சென்னையில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை!

சென்னையில் அதிகரித்து வரும் தெருநாய் தொல்லை!

கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

சென்னை, மே 15- சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்கள் கட்டப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையிலும், வெறிநாய்க்கடி நோய் பரவுவதை தடுக்கும் வகையிலும், திரு.வி.க. நகர் மண்டலம்-புளியந்தோப்பு, தேனாம்பேட்டை மண்டலம்-லாயிட்ஸ் காலனி, கோடம்பாக்கம் மண்டலம்-கண்ணம்மாபேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலம்-சோழிங்கநல்லூர், ஆலந்தூர் மண்டலம்-மீனம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் புளியந்தோப்பு, திரு.வி.க. நகர், நுங்கம்பாக்கம், லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை மற்றும் மீனம்பாக்கம் ஆகிய 6 இடங்களில் செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களும் செயல்பட்டு வருகின்றன. புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களில் நாளொன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கும், மீனம்பாக்கம் நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தில் நாளொன்றுக்கு 15 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூர் நாய்கள் இனக்கட்டுப்பாடு மையத்தில் நாளொன்றுக்கு 10 தெருநாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும், கூடுதலாக சென்னை மாநகராட்சியின் 1, 2, 3, 4, 5, 7, 8, 11, 12 மற்றும் 14 ஆகிய 10 மண்டலங்களில் நாளொன்றுக்கு தலா 30 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மற்றும் ரேபிஸ் தடுப்பூசிகள் செலுத்தும் வகையில் 10 நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தெருநாய்கள் பிடிக்கும் பணிகளுக்காக 16 நாய்கள் பிடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் நாய் பிடிக்கும் வலைகளுடன் சராசரியாக 5 நாய் பிடிக்கும் பணியாளர்கள் என 78 பணியாளர்கள், கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ள 23 கால்நடை உதவி மருத்துவர்கள், கருத்தடை அறுவை சிகிச்சையின் தரத்தை உறுதி செய்வதற்காக 4 கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாய் பிடிக்கும் பணியாளர்களுக்கு சீருடைகள், காலணிகள், கையுறைகள் மற்றும் நாய் பிடிக்கும் வலைகள் வழங்கப்பட்டுள்ளது.

செல்லப் பிராணிகளுக்காக விபத்து, அவசர சிகிச்சை மையம்

'கோடம்பாக்கம் மண்டலம்-கண்ணம்மாபேட்டையில் செல்லப்பிராணிகளுக்கான விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது. செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செல்லப்பிராணிகளுக்கு பொதுவாக ஏற்படும் அனைத்து வகை நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுவதுடன், உடல்நலக் குறைவு ஏற்படாத வகையில் தடுக்க கால்நடை உதவி மருத்துவர்களால் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது. வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை என்ற இலக்கினை அடையும் பொருட்டு, செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்களில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி விதிகளின்படி, செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதற்காக நாய்கள் இனக்கட்டுப்பாடு மையங்களிலும், இணையதளம் வாயிலாகவும் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் ரூ.50 என்ற கட்டணத்தில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்பட்ட பிறகே நாய்களுக்கு உரிமம் வழங்கப்படுவதால் செல்லப்பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு ரேபிஸ் நோய் பரவுவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. 2024ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 9,883 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாய்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ள நாய் பிடிக்கும் பணியாளர்களுக்கும், இனக்கட்டுப்பாடு மைய ஊழியர்களுக்கும், செல்லப்பிராணிகள் சிகிச்சை மைய பணியாளர்களுக்கும் ஆண்டுதோறும் உலக வெறிநாய்க்கடி நோய் தினத்தன்று வெறிநாய்க்கடி நோய் தடுப்பு நடவடிக்கையாக, பொது சுகாதாரத்துறை, கால்நடை மருத்துவப்பிரிவு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சென்னையில் தெருநாய்களின் பெருக்கம் வருங்கால சமுதாயம் மிகுந்த ஆபத்துக்குள்ளாகும் என சமூக ஆர்வலர் கருத்து தெரி வித்துள்னர்.