tamilnadu

img

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திடுக.. வாலிபர் சங்கம் கோரிக்கை

சென்னை:
தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரிகின்ற சிறப்பு ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின்  மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழக அரசுப் பள்ளிகளில் 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக் கலை, கட்டடக்கலை, வாழ்வியல் திறன் உள்ளிட்டவற்றை கற்றுத்தர 2011 - 12 ஆம் ஆண்டில் அப்போதைய தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் 16 ஆயிரத்து 549 சிறப்பாசிரியர் களை, தொகுப்பூதியமாக மாதம் ஐந்தாயிரம் ரூபாய் வழங்கி நியமித்தார். ஆனால் இவர்கள் பகுதி நேர ஆசிரியர்களாக மட்டும் இல்லாமல், பள்ளிகளில் கணினிவழி பதிவேற்றங்கள், வருகைப் பதிவேடு, மாணவர்களுக்கான உதவித்தொகை பணிகளில் முழுநேரமாக ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா, 40 சதவீதம் ஊதிய உயர்வை அறிவித்து சிறப்பு ஆசிரியர்களுக்கு 7,700 ஆக அதிகரித்து கொடுத்தார். தொடர்ந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள் பணி நிரந்தரம் ஆகாமலேயே ஓய்வு, பணியிலிருந்து விலகல், இறப்பு என 5 ஆயிரம் காலிப் பணியிடங்கள் வந்துவிட்டது. தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தொகுப்பூதியம் அடிப்படையில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் கொடுக்கப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பள்ளிக்கல்வித்துறையை தவிர்த்து இதர அனைத்துத் துறைகளிலும் பணிபுரியக்கூடிய தினக்கூலி, தொகுப்பூதியம் வாங்குபவர்களை,  ஊதிய உயர்வு பணி நிரந்தரம் செய்துவருகிறது அரசு. தமிழகத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் வேலை செய்யக்கூடிய ஆசிரியர்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவருகின்றனர் இறுதிக்கட்டமாக கருணை மனுக்களையும் அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக மூன்று மாதத்திற்குள் கமிட்டி அமைத்து பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணப்படும் என்றும் கூறியுள்ளார். ஆனாலும் அவர்களை பணிநிரந்தரம் செய்வதற்கு அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே தமிழக அரசாங்கம் அரசுப்பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களாக பணிபுரியக்கூடிய 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை உடனடியாக பணி நிரந்தரம் செய்வதற்கும், காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

;