tamilnadu

img

தமிழிசை வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்?தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.சவுந்தரராசன் கேள்வி

திருவள்ளூர், ஏப்.4-


எதிர் கட்சி தலைவர்களின் வீடுகளை மட்டும் குறிவைத்து சோதனைசெய்யும் தேர்தல் ஆணையம், பாஜகவிற்கு அடிமையாக செயல்படுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் குற்றம் சாட்டினார்.மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவள்ளூர் (தனி)மக்களவைத் தொகுதி காங்கிரஸ்வேட்பாளர் முனைவர் கே.ஜெயக்குமார் மற்றும் பூந்தமல்லி சட்ட மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (ஏப்.3) தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தற்கு கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் ஆர்.மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எஸ். கோபால்,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இ.மோகனா, கே.ரமா, ஊராட்சி மன்றமுன்னாள் தலைவர் எம்.பழனி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர்கி.வேணு, தொமுச பேரவை மாநில பொதுச் செயலாளர் மு.சண்முகம், ஒன்றியச் செயலாளர் சத்தியவேலு, மதிமுக மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வி.சி.க நிர்வாகி கபிலன் உட்பட பலர் பேசினர். சிபிஎம் கூட்டுச்சாலை கிளைச் செயலாளர் பி.தேவேந்திரன் நன்றி கூறினார்.இந்தக் கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் பேசியதாவது:-பாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் கைத்தறி, விசைத்தறி, பட்டாசு, முந்திரி, விவசாயம் என அனைத்து துறையும் பாதித்துள்ளது. விலைவாசியை குறைத்தோம், புதிய தொழிற் சாலைகள் திறக்கப்பட்டது. வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன என ஏதாவது மோடியால் சொல்ல முடியுமா? பாகிஸ்தான் மீது போர்என்ற பெயரில் மக்களை திசைதிருப்புகிறார். ராணுவம் செய்ததை எல்லாம் தான் செய்ததாக சொல்லுகிறார். ராணுவ ரகசியங்களை வெளியிடுகிறார். எல்லையை ராணுவ வீரர்கள் பாதுகாத்து வருகிறார்கள், ஆனால் மக்களை பாதுகாக்க மோடி தவரவிட்டுவிட்டார்.


உதய் மின் திட்டத்தை, உணவுபாதுகாப்பு திட்டத்தை, நீட் தேர்வைஜெயலலிதா எதிர்த்து வந்தார். ஆனால் தமிழ் நாட்டின் உரிமைகளை இப்போது உள்ள ஆட்சியாளர்கள் இதை விட்டுக்கொடுத்து விட்டார்கள்.இப்போது எதிர் கட்சிகளின் வீடுகளை மட்டும் குறிவைத்து தேர்தல் ஆணையம் சோதனை செய்கிறது. பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வீட்டில் ஏன் சோதனை நடை பெறவில்லை. மற்றவர்கள் வீட்டில் ஏன் நடக்கவில்லை. ரிசர்வ் வங்கி, சிபிஐ, தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் போன்றவைகள் தன்னாட்சி பெற்றவைகள். இவை அனைத்தையும் பாஜக ஆட்சிக்கு அடிமைகளாக மாற்றிவிட்டார் மோடி. இந்த அராஜக ஆட்சியை வீழ்த்த மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

;