tamilnadu

img

சமூக நீதியும், பொருளாதார மேம்பாடும் ஒரே காலத்தில் நடைபெற வேண்டும்.... ஆதி திராவிடர் நலத்துறை கூட்டத்தில் எம்.சின்னத்துரை எம்எல்ஏ பேச்சு...

சென்னை:
 சமூக நீதியும் பொருளாதார மேம்பாடும் ஒரே காலத்தில் நடைபெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற கொறடா எம்.சின்னத்துரை கூறினார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மாநில விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் சென்னைதலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,ஆதிதிராவிடர் -  பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார் (காங்கிரஸ்) தொல்.திருமாவளவன் (விசிக), சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம்.சின்னத்துரை,  தலைமை செயலாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் கொறடா எம்.சின்னத்துரை பேசியதாவது: கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாககிடப்பில் கிடந்த மாநில விழிப்புணர்வு மற்றும்கண்காணிப்புக்குழு தற்பொழுது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தக் கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறை கூட்டப்பட வேண்டும். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள ஏழரைக்கோடி மக்களின்ஒற்றுமைக்கு வழிவகுக்கப்பட வேண்டும்.
சமூக நீதியும், பொருளாதார மேம்பாடும் ஏககாலத்தில் நடைபெற வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடுஆகும். பட்டியல் இன மக்களின் வாழ்வு மேம்படஇந்தக்கூட்டம் பொருத்தமான திசைவழியை நோக்கிப் பயணிக்கட்டும். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கி தமிழகத்தில் புதிய வரலாற்றை முதலமைச்சர் படைத்துள்ளார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நடவடிக்கையை தமிழக மக்கள் எந்தவித சலனமும் இல்லாமல்ஏற்றுக்கொண்டுள்ளனர். சமூக நீதிப் போராட்டத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு முன்னேற வேண்டும்.

அரக்கோணம் சோகனூர் இரட்டைப் படுகொலை, அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூர் கிராமத்தில் நந்தினி மீதான பாலியல் வன்கொடுமை, தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் காட்டப்படும் சாதியப் பாகுபாடு, கோவில்திருவிழாக்களில் தலித் மக்கள் மீதான வன்மம் என சமூகத்தில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதோ, குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலமாக தண்டனை பெற்றுக்கொடுக்கவோ பெரும்பாலான காவல் நிலையங்கள் முயற்சிப்பதில்லை. வன்கொடுமை நிகழ்த்தியவர்களிடமே கவுண்டர் பெட்டிசன் வாங்கிக்கொண்டு வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கை பெரும்பாலான காவல்நிலையங்களில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இருதரப்பிலும் உள்ள உண்மையை, நியாயத்தை கண்டறிவதற்கு காவல் நிலையங்கள் போதுமான அக்கறை செலுத்த வேண்டும்.

புகார் தெரிவித்து 60 நாட்களுக்குள் வன்கொடுமைதடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 338 அரசாணையின்படி வழக்கை நடத்துவதற்கான நிதி உதவி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை, வீடுஉள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகள் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 8-இன்படிநடந்துள்ள சம்பவங்கள் குறித்து மாநில முதல்வருக்கு காவல்துறை ஆய்வறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும். பழங்குடியினர் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.பழங்குடியினர் வனச்சட்டம் 2006 அடிப்படையில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு எம்.சின்னத்துரை பேசினார்.

;