tamilnadu

img

எரிபொருள் விலையுயர்வை திரும்பப்பெறுக... அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துக.... இன்று முதல் 3 நாட்கள் எழுச்சிமிகு போராட்டம்.... இடதுசாரிக் கட்சிகள், விசிக அழைப்பு...

சென்னை:
எரிபொருட்கள் விலையை கடந்த 54 நாட்களில் 30 முறை உயர்த்தி மக்கள் மீது கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ள ஒன்றிய மோடி அரசை கண்டித்தும்; கொரோனா பெருந்தொற்றின் அடுத்த அலையிலிருந்து மக்களை காத்திட முன்னெச்சரிக்கையாக அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்திட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல நூற்றுக்கணக்கான மையங்களில் ஜுன் 28, 29, 30 தேதிகளில் மாபெரும் போராட்டம் நடைபெறுகிறது. 

மக்களின் துயரம் துடைக்கும் இந்த ஜனநாயகப் போரில் பங்கேற்குமாறு இடதுசாரிக்கட்சிகள், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆகி யவை கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாநிலச் செயலாளர் என்.கே.நடராசன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை வருமாறு:

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலைகள் தினந்தோறும் உயர்த்தப்படுகின்றன. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் சுயேட்சையாக விலைகளை நிர்ணயம் செய்கிறது என பாஜக மோடி அரசு பாசாங்கு காட்டி வருகிறது.கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கிய ஆரம்பகாலத்தில், அதனை  தடுக்கும் நடவடிக்கையை தொடங்காமல் அரசியல் ஆதாயம் தேடிய ஆர்.எஸ்.எஸ். மற்றும்பாஜக மோடி அரசு, அந்தக் கொடிய நோய்த்தொற்று பரவலைக் காரணமாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாப  சுயநலவெறி க்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. இதன்காரணமாக பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ரூ. 100-ஐ தாண்டியிருக்கிறது. இது மேலும் ரூ. 125-வரை அதிகரிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக் கிறார்கள். மக்கள் நலன் சார்ந்த கொள்கை அணுகுமுறையால்  பெட்ரோல்,  டீசல் லிட்டர் முறையே ரூ. 50- மற்றும் ரூ. 40-க்கு விற்க முடியும் எனபொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவல் தீவிரமாகி, மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாம் அலைஉருவாகி மேலும் படுமோசமான  சேதாரங் களை ஏற்படுத்தும் எனவும், குறிப்பாக, குழந்தைகளை குறிவைத்து தாக்கும் எனவும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இதற்கிடையில் கருப்பு பூஞ்சை, டெல்டா பிளஸ் என உருமாறியகொரோனா நோய்த்தொற்று அபாயம் அச்சுறுத்தி வருகிறது.

இந்த புதிய வகை  நோய்த்தொற்றுகளில்  இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மட்டும்தான் ஒரே வழி என கூறப்படுகின்றது. ஆனால் நோய்த் தொற்று தாக்குதல் தொடங்கி 18 மாதங்கள் ஆகியும், பாஜக ஒன்றிய அரசு குடிமக்களுக்கு தடுப்பூசி மருந்து கொடுக்க வில்லை. கிடைக்கும் மருந்துகளை பகிர்ந்தளிப்பதில் விருப்பு, வெறுப்பு காட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.முன் யோசனையும், போதிய முன் ஏற்பாடுகளும் இல்லாமல் திடீரென நாடு முடக்கம் செய்யப்பட்டதில் நாட்டின் உற்பத்தி தடைபட்டது. சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் கொன்றழிக்கப்பட்டன. கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும்பாடு எழுத்தில் வடிக்க இயலாத அவலமாகும்.
இந்த நெருக்கடியான காலத்தில் மக்கள் துயரம் போக்கும் கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் ஜூன் 16 முதல் இருவார காலம் நாடு தழுவிய  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ் நாட்டில்இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து ஜூன் 28-ல் தொடங்கி 29, 30  ஆகிய தேதிகளில் (திங்கள், செவ்வாய், புதன்) மூன்று நாட்கள் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.

கோரிக்கைகள்

#    கட்டுக்கு அடங்காமல் அதிகரித்து  வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி,  2014 முதல் உயர்த்தப்பட்ட கலால் வரிகளை பெருமளவுகுறைத்து, விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும்.

#   கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு மருந்துகள் உட்பட உயிர் காக்கும் மருந்து களின் கள்ள வணிகத்தை தடுத்து, நியாய விலையில் மக்களுக்கு மருந்துகள்  தட்டுப்பாடின்றி கிடைப்பதை ஒன்றிய அரசு உறுதிசெய்ய வேண்டும்.

#    செங்கல்பட்டு இந்துஸ்தான் பயோடெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழ்நாடு அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும்.

#    தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப, போதுமான  தடுப்பூசி மருந்துகளும், பேரிடர்கால நிவாரண நிதியும் வழங்க வேண்டும்.

#    அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

#    தொழில் முடக்கம், வேலையிழப்பு, வேலையின்மை மற்றும் வருமானத்திற்கு வழியில்லாத காரணங்களால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கு மாதம் ரூ.7500- வீதம் அடுத்த ஆறு மாதங்களுக்கு வழங்க வேண்டும்.

#    மத்திய உணவுத் தொகுப்பில் இருந்து நபருக்கு தலா  10 கிலோ வீதம் உணவு  தானியங்கள் விலையில்லாமல் வழங்கவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து, மக்கள் உணர்வைபிரதிபலித்து நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அனை த்துத் தரப்பு மக்களும் பங்கேற்று, ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் பங்கேற்பு

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 3 நாட்களும் பல நூற்றுக்கணக்கான மையங்களில் நடைபெற உள்ள இப்போராட்டத்திற்கு சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்), விசிக ஆகிய கட்சிகளின் மாநில, மாவட்டத் தலைவர்கள் தலைமையேற்கின்றனர். திருவள்ளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்திய சென்னையில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், தென்சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, வடசென்னையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

;