tamilnadu

img

பீமாகொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை பழிவாங்குவதா? சிபிஎம் கண்டனம்!

பீமாகொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டித்து அனைத்து ஜனநாயக உள்ளம் கொண்டவர்களும் குரலெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

மராட்டிய மாநிலத்தில் பீமாகொரேகான் என்ற இடத்தில் எல்கார்பரிஷத் என்ற அமைப்பு நடத்திய தலித்துகள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் வன்முறை நிகழ்ந்ததாக கூறி இச்சம்பவத்தில் நேரடியாக சம்மந்தப்படாத பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மக்கள் உரிமைப் போராளிகள் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட பலர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பின்னர் தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டது. இவர்கள் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இன்றுவரையில் ஜாமீன் கூட வழங்கப்படாமல் மும்பை சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களோடு கைது செய்யப்பட்ட தந்தை ஸ்டேன் சுவாமி அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமலும், பாரிச நோயினால் பாதிக்கப்பட்ட இவருக்கு உறிஞ்சிக் குடிக்கும் பாத்திரம் வழங்கப்படாமலும், உடல் நலிவுற்று சிறையிலேயே மரணமடைந்தார். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டன இயக்கம் நடைபெற்றது.

தற்போது இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் அவர்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் “டிஃபால்ட் ஜாமீன்” வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் மீது புலன் விசாரணை நடத்தும் ஏஜென்சி 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் அவருக்கு ஜாமீனில் வெளிவர சட்டப்படி உரிமையுள்ளது. இந்த அடிப்படையில் சுதா பரத்வாஜ் அவர்கள் மீது உரிய காலத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத காரணத்தால் 2019 ஆம் ஆண்டில் அவருக்கு ஜாமீன் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் மிகவும் காலதாமதமாக தற்போதுதான் மும்பை உயர்நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதைப் பொறுத்துக் கொள்ளாத மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி உயர்நீதிமன்ற ஜாமீன் உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் அவசரஅவசரமாக மனுதாக்கல் செய்துள்ளது. உச்சநீதிமன்றம் இம்மனு மீது என்ன முடிவு செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஒன்றிய அரசு சிறந்த பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைப் போராளிகள் மீது வழக்கு போட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைத்துள்ளது மட்டுமின்றி உரிய விசாரணையும், குற்றப்பத்திரிக்கைகளும் இல்லாமல் ஆண்டுக்கணக்கில் இவர்களை ஜாமீனில் கூட வெளிவர முடியாமல் கொடுமைப்படுத்துவது அராஜகத்தின் உச்சக்கட்டமாகும். இத்தகைய நடவடிக்கைகளை வன்மையாக கண்டித்து அனைத்து ஜனநாயக உள்ளம் கொண்டவர்களும் குரலெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

;