tamilnadu

img

பாலிடெக்னிக் தேர்வில் மீண்டும் முறைகேடா?

சென்னை:
கடந்த முறை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள், மீண்டும் சதி வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது.2017 ஆம் ஆண்டு டிஆர்பி சார்பில் 1058 காலிப்பணியிடங்களுக்கான பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 196 பேர் தலா 25 லட்சம் பணம் கொடுத்து தேர்வில் முறைகேடு செய்து அதிக மதிப்பெண் பெற்றது நிரூபிக்கப்பட்டது.

பின்னர் 2018ஆம் ஆண்டு அந்த தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, இதுவரையில் 56 பேர் கைது செய்யப்பட்டு அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் அந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை நடத்துவதற்கு டிஆர்பி அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்ப பதிவை துவக்கி உள்ளது.இதில் கடந்த முறை முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த முறை இடைத்தரகராக செயல்பட்ட ஒரு சிலர் மட்டுமே கைதுசெய்யப்பட்ட நிலையில் பல முக்கிய புள்ளிகள், 2017இல் முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு பணத்தை திரும்பத் தராமல் இந்த முறை நிச்சயம் வேலை பெற்று தருவதாக உறுதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் தற்போது சிக்கியுள்ள இடைத்தரகர்கள் ஏற்கனவே டிஆர்பி பாலிடெக்னிக் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என சிபிசிஐடி போலீசாரே தெரிவித்துள்ள நிலையில் சந்தேகம் இன்னும் வலுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.எனவே கடந்தமுறை பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டி தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 196 பேருக்கு, டிஎன்பிஎஸ்சி அறிவித்தது போல வாழ்நாள் தடை விதித்து அவர்கள் இனி எந்த தேர்விலும் எழுத முடியாதபடி உத்தரவிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

;