tamilnadu

img

மக்காச்சோள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் அறிவிப்பு

சென்னை:
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அமெரிக்கப் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழத்தில் மக்காச்சோளம் முக்கியமான பயிராக உள்ளது. குறைவான தண்ணீர் பயன்பாட்டில் விளையும் என்பதால் விவசாயிகள் அதிக அளவில் பயிரிடுகின்றனர். இந்நிலையில், உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ள அமெரிக்கப் படைப்புழு தாக்குதலால், மக்காச்சோளம் சாகுபடி வெகுவாக பாதித்தது. இதனால், தங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று 2 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.186 கோடி நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.இறைவைப் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500-ம், மானாவாரி பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.7,410-ம் நிவாரணமாக வழங்கப்படும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேராத விவசாயிகள் உடனே காப்பீட்டு திட்டத்தில் சேர வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அனைத்து விவசாயிகளுக்கும் உறுதி செய்க: பெ.சண்முகம்
இந்நிலையில் முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்திருக்கும் அறிக்கையில், “கடந்த ஆண்டு மக்காச்சோளப் பயிரில் அமெரிக்க படைப்புழு தாக்கி லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர் அழிந்து போனது. லட்சக்கணக்கான விவசாயிகள் பெருத்த இழப்புக்கு ஆளாகினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்தப் பிரச்சனை தொடர்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தியது. ஜூன் 20 ஆம் தேதி தமிழக வருவாய்த்துறை அமைச்சரை சந்தித்து இழப்பீடு வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினோம். 

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஜூலை 4 அன்று மக்காச்சோள பாதிப்புக்கு நிவாரணம் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். 2,20,986 ஹெக்டேருக்கு நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இத்தொகை 2 லட்சத்து 93 ஆயிரத்து 424 விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க படைப்புழுவால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள தொகை குறைவானது என்றாலும் இத்தொகை முழுமையாக விவசாயிகளுக்கு கிடைத்திட அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

;