tamilnadu

வங்கி மோசடியாளர்களுக்கு தண்டனை

சென்னை, பிப். 27- மத்திய புலனாய்வு பிரிவின் சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவினர் தொடுத்த வங்கி மோசடி வழக்கில் வியாழனன்று (பிப்.27) சென்னை எழும்பூர் , கூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்டிரேட் 2 நபர்களுக்கு   தண்டனை விதித்தார். 30.12.1995 அன்று தொடுக்கப்பட்ட இந்த வழக்கின்படி, குற்றவாளிகள் சென்னை, தில்லி மற்றும் இதர இடங்களில் 1993-ல் குற்ற சதித்திட்டத்தின் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யில் நான்கு போலியான கேட்பு வரைவோலைகளை  சமர்ப்பித்து ரூ.2.70 கோடி பெற்றனர் என குற்றம் சாட்டப்ப ட்டது.  சுபத்ரா இன்பெக்ஸ் சென்னை, சிபிகே டிரேடர்ஸ் சென்னை ஆகியவற்றின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பல்வேறு கிளைகள், மற்றும் மும்பை நோவா ஸ்கோசியா வங்கி வழங்கியதாகக் கூறப்படும் போலி வரைவோலைகள் மூலம் இந்தப் பணத்தை இவர்கள் பெற்றனர். இந்த வழக்கில் புலனாய்வு முடிவடைந்து இந்திய தண்ட னையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றப்பத்தி ரிகை சென்னை எழும்பூர், கூடுதல் முதன்மை பெருநகர நீதி மன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த டி. ராஜசேகரன், ஆர். நடடேஷ்குமார் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் மற்றும் ரூ.30,000 அபராதம் விதித்து தண்டனை வழங்கப் பட்டது. மேலும் ஆர். அசோக் குமார்,சி.கிருஷ்ணகுமார், கமல் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.