tamilnadu

புதுச்சேரியில் மின் வழங்கலை தனியாருக்கு கொடுக்கக் கூடாது: சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, மே 20- புதுச்சேரி மின் வழங்கலை தனியாருக்கு கொடுக்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய பொருளதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடியில் சுயச்சர்பு பொருளாதாரம் தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்தார். அதனையடுத்து நிதியமைச்சர் பொருளாதார திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், யூனியன் பிரதேசங்களின் மின் வினியோகத்தை தனியார்மயமாக்கப்படும் என்று அறிவித்தார். யூனியன் பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை தனியாரிடம் தாரை வார்ப்பதால் புதுச்சேரி மக்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும். ஏற்கனவே மின்சார சட்டம் 2003 வாயிலாக, புதுச்சேரியின் மின்வாரியத்தை தனியார்மயமாக்குவதற்கு முன்னோட்டமாக நிறுவனமாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்தது. அப்போது  பொறியாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களின் கடுமையான போராட்டங்களின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

மின்சார (திருத்தச்)சட்டம் 2020ன் மூலம் விவசாயிகள் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின்சாரம் ரத்து, மாநில அரசின் மானியம் ரத்து, கட்டண நிர்ணய உரிமை தனியாருக்கு விடுவது, மின்சாரம் பொதுப் பட்டியலிருந்து மத்திய பட்டியலுக்கு கொண்டு செல்வது போன்ற மாநில அரசின் உரிமைப் பறிப்பு நடவடிக்கைகளும் நடைபெற இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் மின்சாரம் தனியார் மயமாக்குவது என்ற கொள்கை தோல்வி அடைந்துள்ளது. பல நாடுகளிலும், இந்தியாவின் சில மாநிலங்களிலும் கூட தனியார் மின் நிறுவனங்களை அரசு துறையாக மாற்ற வேண்டும் என்று விவாதிக்கிற நிலை உள்ளது. இந்நிலையில் இத்தகைய நடவடிக்கை தேவையா? புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மின் வினியோகத்தை மறுசீரமைக்கிற பணிகளில் அரசு துறைகள் போர்கால அடிப்படையில் செயல்படுகின்றன. தனியார் இருக்கின்ற இடங்களில் சீரமைப்புக்கு நிதி கேட்டு நிர்ப்பந்தித்ததையும், மின் வினியோகம் சீர் செய்ய 3 ஆண்டுகள் வரை எடுத்துக் கொள்கின்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் மின் வினியோகம் ஜூஸ்கோ என்ற தனியார் நிறுவனத்திடம் உள்ளது. அந்நிறுவனம் வீடுகளுக்கு மின்சார வசதி செய்து தராமல் தனியார் கம்பெனிகளுக்கு மட்டும் விநியோகம் செய்கிறது. ஒப்பந்தப்படி மாவட்டம் முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவில்லை. அதனால் தற்போது வேறு வழியின்றி வீடுகளுக்கான மின் விநியோகித்தினை அரசே மேற்கொண்டுள்ளது. லாபம் மட்டுமே குறிக்கோளாக உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை கொள்வார்கள்?

ஆகவே, புதுச்சேரி மாநிலத்தின் மின் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவினை மத்திய அரசு கைவிட வேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி பங்கு, 7வது ஊதிய குழு அமலாக்க நிதி, 15வது நிதிக்குழு ஒதுக்கீடு உள்ளிட்ட நிலுவைகளை வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தின் கொரோனா பாதிப்பு தடுப்பு மற்றும் சிகிச்சையையும், பொருளாதார மீட்புக்காகவும் பேரிடர் நிவாரண நிதி மற்றும் புதுச்சேரி அரசு கோரியுள்ள 990 கோடி ரூபாய் ஆகியவற்றை வழங்க வேண்டும். மின்சார விநியோகத்தை தனியாரிடம் விடக்கூடிய நடவடிக்கையினை புதுச்சேரி அரசு ஏற்கக் கூடாது. மக்களின் நலன் கருதி மின்துறை அரசு கட்டுப்பாட்டிலேயே இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர், அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகள் என அனைத்து பகுதி மக்களும் ஒன்றுபட்டு போராடி மின் துறையை அரசு துறையாக பாதுகாக்க முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அறிகையில் கூறப்பட்டுள்ளது.

;