tamilnadu

img

சாலைப்போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கிடுக... முதல்வருக்கு சிஐடியு சாலைப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் கோரிக்கை....

சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களை பாதுகாக்க  நிவாரண நிதி உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்என்று வலியுறுத்தி தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் (சிஐடியு) முதலமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு மனு அனுப்பியுள்ளது.

சம்மேளனத்தின்  பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார்  முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சுற்றுலா வாகனங்கள், சிறிய சரக்கு வாகனங்கள், கால் டாக்சிகள், டாக்சிகள், மாக்ஸி கேப் என சுமார்5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங் கள் இயங்கிவருகின்றன. இவைஅனைத்தும் வேலைவாய்ப்பற்றவர் களால் சுயதொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் தான் இவர்களின்வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவிய நிலையில் சுமார் ஆறு மாத காலம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்குதளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் கூட சுற்றுலா தலங்கள் போன்றவை முழு பயன்பாட்டுக்கு வரவில்லை.

கடன் தொகை வசூலிப்பதை நிறுத்தி வைத்திடுக!
மேற்கண்ட சூழ்நிலையில் இத்தொழிலும், இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி மேலும் ஊரடங்கு அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான நிலையில் தற்போதைய ஊரடங்கு மேலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சாலை போக்குவரத்து தொழிலை நம்பியுள்ள பல லட்சக்கணக்கான குடும்பங்களை பாதுகாக்கும் பொருட்டு தாங்கள் உரியநடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். தற்போதைய சூழலில் கீழ்க்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.பெரும்பகுதியான வாகனங்கள் சிறிய முதலீட்டுடன் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுத்தான் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வாகனங்கள் இயங்காத நிலையில் மாதாந்திர தவணைத்தொகை செலுத்துவது இயலாததாகும். சென்ற ஊரடங்கின் போது மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியால் ஆறு மாத காலம்மாதாந்திர தவணை தொகை செலுத்துவதை ஒத்திவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போதும், அது போன்ற ஒரு உத்தரவை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பிறப்பிக்க தமிழக அரசு ஒன்றிய அரசிடம் வலியுறுத்த வேண்டுகிறோம்.

தமிழகத்தில் செயல்படும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், நிலைமைசீரடையும் வரை மாதாந்திர தவணைத்தொகை வசூலிப்பதை நிறுத்தி வைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம். வாகனங்கள் வருடத்திற்கு ஒருமுறை விபத்து மற்றும் மூன்றாம் நபர் இழப்பீடுகள் காப்பீட்டை புதுப்பிக்க வேண்டும். 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில் வாகனங்கள் தொடர்ந்து இயங்காத நிலையே உள்ளது. இதன் காரணமாக விபத்துக்கள் எண்ணிக்கை குறைந்து நஷ்ட ஈடு வழங்குவதற்கான தேவை ஏற்படவில்லை. எனவே, வாகனங்கள் இயங்காத காலத்திற்கு ஏற்ற அடிப்படையில் காப்பீட்டு காலம் நீட்டிக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தலையிட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

வாகனங்கள் இயங்காத காலத்திற்குரிய சாலை வரியை செலுத்துவதில் இருந்து விலக்களிக்க வேண்டும்.ஏற்கனவே வரி கட்டிய வாகனங் களுக்கு எதிர்காலத்திற்கான வரியாக வரவுவைத்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தமிழக அரசு நல வாரியத்தின் மூலம் சென்ற ஊரடங்கின் போது நிவாரணத்தொகை அறிவித்தது. பெரும்பகுதி யான தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினர்களாக இல்லாத நிலையில் அதன் பலன்கள் தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, அனைத்து தொழிலாளர்களுக்கும் நல வாரிய பலன்கள் வழங்கிட வலியுறுத்தி சிஐடியுசம்மேளனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு (W.P.No. 7520 of 2020) தாக்கல்செய்தோம். அதையொட்டி, அளித்த தீர்ப்பில் அனைத்து தொழிலாளர்களையும் 2020 டிசம்பர் மாதத்திற்குள் நல வாரியத்தில் பதிய வேண்டும் எனவும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சி தலைவர்கள், தொழிலாளர்களுடைய முழுமையான விவரங்களை சேக ரிக்க வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தது. மேற்படி உத்தரவை அமல்படுத்த வலியுறுத்தி சிஐடியுசம்மேளனத்தின் சார்பில் தொழிலாளர் துறைக்கு முறையீடு செய்துள்ளோம். எனவே, அனைத்து தொழிலாளர்களுடைய பட்டியலை சேகரித்துஅனைத்து சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் நல வாரியத்தின் மூலம் கொரோனா கால நிவாரண நிதியாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படவேண்டும்.

தேர்தல் பணிக்கான வாகன வாடகை வழங்கிடுக!
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை ஒட்டி, தேர்தல் பணிக்காக மாவட்ட நிர்வாகங்கள் மூலம், வாடகை வாகனங்கள் எடுத்து பயன்படுத்தப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்றதேர்தல் பணிக்காக அரசால் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு இதுவரை வாடகை வழங்கப்படவில்லை. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்குரிய வாடகையை வழங்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.இந்த மனுவின் நகல் மாநிலநிதியமைச்சருக்கும் அனுப்பப்பட்டுள் ளது.

;