tamilnadu

img

இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு முன்னோட்டமா?

சென்னை:
விவசாய மின்இணைப்புக்கு மீட்டர் பொருத்தும்   உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய - மாநில அரசுகள்போட்டிப் போட்டுக் கொண்டு விவசாயிகளுக்கு எதிரான அடுக்கடுக்கான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. விவசாயம் லாபமற்றதாகவும், அதனால் விவசாயிகள் நலிவுற்று வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் நிலத்தை அவர்களின் ஒப்புதல் இல்லாமலேயே பறிக்கும் செயல்கள் நாடுமுழுவதும் நடைபெற்று வரு கின்றன.இந்த நிலையில், தமிழ்நாட்டில்விவசாயிகளுக்கும் விவசா யத்திற்கும் நேரடியாக பயன ளிக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ரத்து செய்து கட்டணம் வசூலிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையில் தமிழ்நாடு மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமைப் பொறியாளர், மின்விநியோக தலைமைப் பொறியாளர்கள் அனைவருக்கும் 25.6.2019 அன்று அனுப்பியுள்ள கடிதத்தில், விவசாயத்திற்கு தட்கல் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்து மின் இணைப்பிற்கும் மீட்டர் பொருத்த வேண்டும் என்றும் மின் பயனீட்டு அளவைகுறைந்த கட்டணம் குறித்தமென்பொருளில் பதிவிட வேண்டுமென்றும்,  விவசாயத்திற்கு புதிதாக மின் இணைப்பு வழங்கினால் கட்டாயம் மீட்டர் பொருத்தவேண்டும் என்றும், இரண்டு மாதத்திற்கொரு முறை மின்பயன்பாடு குறித்த அளவீட்டை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்பதை ரத்து செய்து கட்டணம் வசூலிப்பதற்கான முன்னோட்டம் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கருதுகிறது. 

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. மூச்சுக்கு முன்னூறு தடவை நான்ஒரு விவசாயி என்று கூறிகொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  இத்தகைய விவசாய விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா வடுகபாளையம் மின் பகிர்மானத்திற்குட்பட்ட பகுதிகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்த செப்டம்பர் 10 ஆம் தேதி ஊழியர்கள் வருகை தந்துள்ளனர். விவசாயிகள் திரண்டு தடுத்ததுடன் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளரிடம் நேரில் சென்று ஆட்சேபணையை தெரிவித்து மனு அளித்துள்ளனர்.விவசாயத்திற்கு இலவச மின்சாரம் என்பது விவசாயிகள் பல்லாண்டு காலம் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி ஆட்சியாளர்களின் அடக்கு முறைகளை எதிர்கொண்டு விவசாயிகள் உயிர் தியாகம் செய்து பெற்ற ஒன்றாகும்.எனவே, போராடிப் பெற்றுள்ள இந்தச் சலுகையை பறிப்பதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்தால் மின்சாரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்துவரும் 21 லட்சம்மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகள் அனைவரும் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டிய அவலநிலை உருவாகும் என்றுதமிழக அரசுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.

எனவே, விவசாய இணைப்புக்கு மீட்டர் பொருத்தும் இந்த உத்தரவை உடனடியாக திரும்பப்பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மீட்டர் பொருத்த முற்பட்டால் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு விவசாயிகளை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;