tamilnadu

img

உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்த தமிழக வீரர்!  

உலக செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை 2ஆவது முறையாக மீண்டும் தோற்கடித்து தமிழக வீரர் பிரக்ஞானந்தா சாதனை படைத்துள்ளார்.    

செசபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டி ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. இதில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெள்ளியன்று நடைபெற்ற செசபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் செஸ் போட்டியில், உலக செஸ் சாம்பியன் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை இந்திய இளம் வீரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா எதிர்கொண்டார்.  

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 40ஆவது நகர்த்தலின்போது கார்ல்சன் செய்த சிறு தவறை கண்டுபிடித்த அவர் அதை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம் பிரக்ஞானந்தா இரண்டாவது முறையாக கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும் இவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.  

16 வயதான பிரக்ஞானந்தா தற்போது 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது ஆட்டத்தின் தரம் பற்றி எனக்குத் திருப்தியில்லை. சில உத்திகளை நான் தவறவிட்டு விட்டேன். நாளை இன்னும் உஷாராக நான் விளையாட வேண்டும் என்றார்.  

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஆன்லைன் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

உலகின் இளைய கிராண்ட் மாஸ்டரான அபிமன்யு மிஸ்ராவும் 16 பேர் கொண்ட போட்டியில் பங்கேற்கிறார்.

;