tamilnadu

img

இன்று செய்தியாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ்..

சென்னை:
சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் நான்தான் என கூறிக்  கொண்டிருக்கிறார் ஓபிஎஸ். ஆனால் அதிமுகவில் பெரும்பாலான நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலேயே தேர்தலையும் சந்திப்போம் என்கின்றனர்.

இதனையே அண்மையில் நடந்த அதிமுக செயற்குழுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வலியுறுத்தினார். ஆனாலும் ஓபிஎஸ் தாமே முதல்வர் வேட்பாளர் என்று விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அரசு நிகழ்ச்சிகளை செவ்வாயன்று புறக்கணித்துவிட்டு வீட்டில் ஆதரவாளர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ்.இதனால் ஓபிஎஸ் என்ன அதிரடி காட்டப் போகிறார் என்கிற பரபரப்பு நள்ளிரவை தாண்டியும் நீடித்தது. மேலும் துணை முதல்வர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்யவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இன்று திடீரென சென்னை பெருநகர வளர்ச்சி குழும கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டார் ஓபிஎஸ். அப்போது முதல்வர் வேட்பாளர் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, அக்டோபர் 1ஆம் தேதி நான் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறேன் என்று மட்டும் ஓபிஎஸ் பதில் கொடுத்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அக்டோபர் 7ஆம் தேதிதான் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திப்பார்கள் என கே.பி.முனுசாமி கூறியிருந்தார்.இந்த நிலையில் திடீரென ஓபிஎஸ் தனியே வியாழனன்று (அக்.1) செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக அறிவித்திருப்பது புதிய பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது. ஏற்கனவே நடத்தியதுபோல இன்னொரு தர்மயுத்தத்துக்கான - அதாவது தர்மயுத்தம் 2.0 அறிவிப்பை ஏதேனும் ஓபிஎஸ் வெளியிடுவாரோ? என்கிற விவாதமும் களைகட்டி இருக்கிறது.