tamilnadu

மேலும் 12 அணு உலைகளை இந்தியாவில் நிறுவ திட்டம் அணுசக்தி துறைத்தலைவர் கே.என்.வியாஸ் தகவல்

சென்னை, ஏப். 19- “மின் உற்பத்திக்காக, மேலும் 12 அணுஉலைகளை இந்தியாவில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது” என்று ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச அணுக்கரு கண்காட்சியில் பங்கேற்ற இந்திய அணுசக்தி துறைத் தலைவர் கே.என். வியாஸ் தெரிவித்தார். ரஷ்யாவில், அண்மையில் நடந்த அணுசக்தித் துறை தொடர்பான ஆட்டம் எக்ஸ்போ என்னும் சர்வதேசக் கண்காட்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், “அணுசக்தி தூய்மையானது மட்டுமல்ல; சாமானியர்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுக்க கூடியது” எனவும் தெரிவித்தார்.இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:“சுற்றுப்புறச் சூழலில் எந்தவிதமான மாசுவையும் ஏற்படுத்தாமல், தூய்மையான எரிசக்தியாக திகழ்வதில்… ஒப்பிட எதுவுமே இல்லாத அளவுக்கு ஈடு இணையற்றதாக இருப்பது அணுமின்சக்திதான். அதுமட்டுமல்ல; மக்களது வாழ்நிலையில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்த வல்லது அணுக்கரு தொழில்நுட்பம்.உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்ட - இந்தியாவின் கைகா அணுமின் உற்பத்தி நிலையத்தில் 220 முதல் 250 மெகாவாட் மின்சாரம் தொடர்ந்து 962 நாட்களாக… 99.3 சதவீத உற்பத்தித் திறனுடன் செயல்பட்டு வருவதைச் சொல்லலாம். தற்போது இந்தியாவில், கனநீர் கொண்டு இயங்கும் 18 அணு உலைகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும், கனநீர் அடிப்படையிலான 10 புதிய உயர் அழுத்த அணுமின் உலைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு, மென்னீர் அடிப்படையில் செயல்படும் புதிய 2 அணு உலைகளை அமைக்கவும் இந்தியா திட்டமிட்டு வருகிறது என்றார் அவர்.

;