tamilnadu

அமைச்சர் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி தேவையில்லை.... நீதிமன்றம்

சென்னை:
நிலத் தகராறில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு தனிப்பட்டது என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவையில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்தை காட்பாடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் வாங்கியுள்ளனர். பின்னர் அந்த இடத்தை ஆந்திராவை சேர்ந்த பிரம்மானந்தம், சத்யநாராயணா என்பவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர்.

இதற்காக 65 கோடி ரூபாய் தருவதாக ஆந்திராவைச் சேர்ந்த இருவரும் ஒப்பந்தம் போட்டுவிட்டு சேகர் ரெட்டியை தங்களுடன் சேர்த்துக்கொண்டு 13 கோடி ரூபாய் மட்டுமே காட்பாடியைச் சேர்ந்தவர்களுக்கு கொடுத்துள்ளனர். மீதமுள்ள 52 கோடி ரூபாயை தராமல் மோசடி செய்துள்ளனர்.இதில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணியின் தலையீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், காட்பாடியைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் இருவரும் உயர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர். இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தனி நீதிபதி ஜூன் 22ஆம் தேதி தள்ளுபடி செய்தார்.தொடர்ந்து, அந்த உத்தரவை எதிர்த்து ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் இருவரும் மீண்டும் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, நிலத் தகராறில் அமைச்சர் கே.சி.வீரமணியின் தலையீடு தனிப்பட்டது என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசின் அனுமதி தேவை இல்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.மேலும், அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக சிவில் வழக்கு தொடர்வதா அல்லது ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி செயல்படுவதா என்பது குறித்து மேல்முறையீட்டா ளர்கள் முடிவெடுக்கலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;