tamilnadu

‘வாகனங்களில் கட்சிக் கொடிக்கு அனுமதியில்லை’

மதுரை, ஏப்.23- வாகனங்களில் கட்சி கொடி கட்டி கொள்வதற்கோ, தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்வதற்கோ, மோட்டர் வாகன சட்டபடி எவ்வித அனுமதியும் இல்லை என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல மனுவில், சாலைகள் இணைப்பு பகுதியில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும், வளைவு பகுதியில் சிவப்பு எச்சரிக்கை விளக்கு பொருத்த வேண்டும். சாலை நடுவே அரளிச் செடிகள் நட வேண்டும். ஆனால் இந்த பணிகள் முறையாக நடை பெறுவதில்லை எனக் கூறப்பட்டிருந்தது.இருசக்கரம், மற்றும் நான்கு சக்கரவாகனங்களில் தடை செய்யப் பட்ட எல்இடி பல்புகளும், இரண்டு பல்புகளை விட அதிக பல்புகளையும் சிலர் பொருத்தியிருப்பதால், எதிரே வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதோடு, விபத்தும் ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு வாகனங்களில் கட்சிக் கொடிகட்டி கொள்வது, தலைவர்களின் படங்களை வைத்துச் கொள்வது சட்டப்படி அனுமதி உள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.இந்நிலையில், இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் போக்குவரத்துறை சார்பில் பதில்மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், இருசக்கர வாகனங்களில் முகப்பு விளக்கல்லாமல் ஒரு எல்இடி பல்பும், நான்கு சக்கர வாகனங்களில் முகப்பு விளக்கல்லாமல், இரண்டு எல்இடி பல்புகளும் பொருத்தப்படுவது வாகனம் தயாரிக்கும் முறையாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பொருத்தப்படும் எல்இடி பல்புகளால், எதிரில் வரும் வாகனங்கள், வாகனம் இருப்பதை அறிவதற்கு உதவியாக அமைவதோடு விபத்தும் தவிர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், வாகனங்களில் கட்சிக் கொடிகட்டி கொள்வது, தங்களின் தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்வது, பதவிகளை பெரிதாக எழுதி கொள்வது ஆகியவற்றிற்கு, மோட்டர் வாகன சட்டபடி எவ்வித அனுமதியும் இல்லை என்றும் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பினை, தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

;