tamilnadu

img

போக்குவரத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண்க... சிஐடியு....

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு முந்திய ஊதிய ஒப்பந்தக் காலம் முடிந்து 19 மாத காலமாகியும் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் உருவாக்கப்படவில்லை. ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 63 மாத காலமாக பஞ்சப்படி வழங்கப்படவில்லை. 8 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான ஊழியர்களின் பணத்தை நிர்வாகம் எடுத்து செலவு செய்துவிட்டது. இதை ஊழியர்கள் கணக்கில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இரண்டு ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்கள் நடத்தி தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா நோய் தொற்றையும் பாராமல் பொதுமக்களின் பயணத்திற்கு பேருதவியாக பேருந்துகளை இயக்கி வரும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையினை அலட்சியப்படுத்தும் அரசை கண்டித்து பிப்ரவரி 25 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

ஏற்புடையதல்ல...
போராட்டத்தை அறிவித்துள்ள சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் அரசு தன்னிச்சையாக இடைக்கால நிவாரணமாக ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. இந்த தொகையும் ஒப்பந்த காலம் முடிந்த நாளில் இருந்து முன்தேதியிட்டு அறிவிக்கப்படவில்லை.அரசின் கூட்டுபேர உரிமையை பறிக்கும் செயலைகண்டித்து திட்டமிட்டபடி பிப்ரவரி 25 அன்று காலை முதல் வேலைநிறுத்தம் தொடங்கியது. மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் 95 சதவீத அளவிற்கு இயக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலைக்கு அரசின் அணுகுமுறையே காரணம் என சிஐடியு குற்றஞ்சாட்டுகிறது.

ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபடுக!
தங்களது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.
அனைத்து மாவட்டங்களிலும் சிஐடியு இணைப்பு சங்கங்கள் போக்குவரத்து தொழிலாளருக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள் கிறோம்.தமிழக முதல்வர் இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தொழில் அமைதி ஏற்படுவதற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்களை அழைத்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் மீது சுமூக தீர்வு காண முன்வர வேண்டும்.
சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து..

;