tamilnadu

img

‘நீட் தேர்வு’ விலக்கு கோரி சட்டம்.... முதல்வர் அறிவிப்பு...

சென்னை:
நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி பேரவையின் இந்தக் கூட்டத் தொடரிலேயே சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் புதனன்று(ஆக.18) திமுக உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார்.இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“ ‘நீட்’ பிரச்சனை தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் இங்கே அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுச் சொன்னார். நீட் பிரச்சனையைப் பொறுத்தவரையில், கட்சிப் பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து, அதற்காகக் குரல் கொடுக்க வேண்டுமென்ற நிலையிலே நாம்இருக்கிறோம்.அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த அடிப்படையிலேதான், தேர்தல் நேரத்திலே நாங்கள் உறுதி மொழி தந்தோம். ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன், ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குபெறுவதுதான் நம்முடைய லட்சியமாக இருக்கும். அதுகுறித்து நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’ என்று உறுதிமொழி தந்திருக்கிறோம்.அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே, இது பற்றி அலசி ஆராய்ந்து, பொது மக்களுடைய கருத்துகளையெல்லாம் கேட்டு, ஆய்வு அறிக்கையை அரசுக்கு வழங்கிடவேண்டுமென்று சொல்லி, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையிலே ஒரு குழு அமைத்தோம். அவரும் அந்தப் பணியை நிறைவேற்றி, ஒரு அறிக்கையைத் தந்திருக்கிறார். தற்போது அந்த அறிக்கை சட்டரீதியாகப் பரிசீலிக் கப்பட்டு, இந்தக் கூட்டத்தொடரிலேயே அதற்குரிய சட்டமுன் வடிவு கொண்டு வரப்படும்” என்றார்.

;