சென்னை:
இலங்கை தமிழர் அகதிகள் முகாம் இனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று(ஆக.28) பால்வளம், கால்நடை, மீன் வளம் மற்றும் வேளாண்மைத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திருவாரூர் தொகுதி திமுக உறுப்பினர் பூண்டி கலைவாணன், “இலங்கை தமிழர் அகதிகளுக்கு முதலமைச்சர் அறிவித்த திட்டங்களை குறிப்பிட்டு பேசினார்.அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் கிடையாது. அவர்கள் அனாதைகள் அல்ல. இலங்கை தமிழர்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் வகையில் இனி இலங்கை தமிழர் அகதிகள் முகாம் என்பதற்கு பதிலாக ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என அழைக்கப்படும் என்றும் இதற்கான அரசாணை வெளியிடப்படும்” என்றார்.