tamilnadu

img

நீட் ஹால் டிக்கெட் குளறுபடி பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

சென்னை:

நீட் ஹால் டிக்கெட்டில் குழப்பம் இருந்தால், மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாகத் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை கூறியுள்ளது.

நாடு முழுவதும் வரும் மே 5ஆம் தேதி நடைபெறவுள்ள மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். கடந்த ஆண்டே தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் தற்போது நடைபெறும் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டிலும் தேர்வு மையம் தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டிருக்கிறது.

மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில், தேர்வு மைய எண் வேறாகவும், தேர்வு மையம் அமைந்திருக்கும் ஊர் வேறாகவும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது, தேர்வு மைய எண் மதுரையாக இருந்தால், தேர்வு எழுதும் மையம் திருநெல்வேலி என இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ”நீட் ஹால் டிக்கெட்டில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வாயிலாக போதிய விவரங்களைப் பெற்று அதில் திருத்தம் செய்து மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்த அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் , ”நீட் ஹால் டிக்கெட்டில் பிழை, குழப்பம் இருந்தால் அவற்றை உரிய மாணவர்களிடம் பெற்று முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு ஒப்படைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

;